குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தினால் 140 மில்லியன் ரூபா போனஸ் கொடுப்பனவு
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனம் (Kurunegala Plantations), 2025 ஆம் ஆண்டில் ஈட்டிய சிறப்பான நிதி முன்னேற்றத்துடன், ஊழியர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில் 140 மில்லியன் ரூபாவை போனஸ் கொடுப்பனவாக ஒதுக்கியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபா போனஸ் தொகையுடன் ஒப்பிடுகையில் 100 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
“முயற்சியின் ஊடாக சவால்களை வென்றோம்” எனும் கருப்பொருளின் கீழ், குருநாகல் சீஸன்ஸ் ஹோட்டல் (Seasons Hotel) வளாகத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்றது
ஊழியர் பணித்திறன் மதிப்பீடு மற்றும் வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு
நிறுவனத்தின் இலாபத்திலிருந்து ஒதுக்கப்பட்ட 140 மில்லியன் ரூபா போனஸ் தொகையானது 1,066 ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஊழியர்களுக்கு 75,000 ரூபா முதல் ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டமை இதன் சிறப்பம்சமாகும்.
இதற்கமைய, சாதாரண தொழிலாளி ஒருவருக்கு 75,000 ரூபா போனஸ் கிடைத்துள்ளதுடன், இது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 45,000 ரூபாவுடன் ஒப்பிடுகையில் 30,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அத்துடன், நிறைவேற்று தர அதிகாரிகளுக்கும் அதிகரிக்கப்பட்ட ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் இம்முறை வழங்கப்பட்டன.
2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 இல் ஒவ்வொரு ஊழியருக்கும் கிடைக்கும் ஊக்குவிப்புத் தொகையை அதிகரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனம் ஈட்டிய 634 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரிக்கு முந்திய லாபத்தின் பலன்களை, நிறுவனத்தின் வெற்றிக்கு பங்களித்த ஊழியர்களுக்கு இவ்வாறு நியாயமான முறையில் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் திரு. திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய, மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன, குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவர் திரு. எச்.எம்.பி. ரத்நாயக்க உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
