உள்நாடு

”மலட்டுக் கொத்து, மலட்டு சத்திர சிகிச்சை நாடகத்தின் புதிய தொடரே முஜிபுர் ரஹ்மான்!” – சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் எதிர்ப்பு!

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை பெயரிடுவதாக அறிவித்துள்ளார். முஜிபுர் ரஹ்மான், ரிஷாட் பதியுதீன் மட்டுமல்லாமல் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளாக சித்திரிக்க இவர்கள் செயற்பட்டுள்ளனர். இவர்களே அன்று மலட்டுக் கொத்து, மலட்டு சத்திர சிகிச்சை என்று கூறி டாக்டர் ஷாபி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு இழைத்த பல்வேறு துயரங்களையும் அவமானங்களையும் இலேசாக மறந்துவிட முடியாது. இத்தகைய இனவாத செயல்களை செய்த இவர்களே இன்று அரசியல் தேவைகளுக்காக முஜிபுர் ரஹ்மானை பிரதான சூத்திரதாரியாக பெயர் சூட்டியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனத் தெரிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுக் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

2020 காலத்தில் மக்கள் ஆணையை பெற்று ஆட்சியை அமைத்து பொலிஸ் அமைச்சராக செயல்பட்ட சரத் வீரசேகர, இன்று முஜிபுர் ரஹ்மானை உயிரத்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக அறிவித்தாலும், அன்று அவர் இது தொடர்பாக எடுத்த சட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்புகிறேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கைது செய்வோம் என்று கூறியே அன்று இவர்கள் ஆட்சிக்கு வந்தனர். இப்போது முஜிபுர் ரஹ்மானுக்கு IS தொடர்புகள் இருப்பதாகவும், அவை ஆணைக் குழு அறிக்கைகளில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றார். அவ்வாறு பெயர் இடம்பெற்றிருந்தால் அதனை வெளிப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்புகிறோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளியிட்ட புத்தகம் குறித்த விமர்சனத்தால் தான் இச்சமயம் இந்த நாணயமற்ற விமர்சனம் இவர் மீது வந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினர் நாட்டின் நலனுக்காக பல்வேறு துறைகள் தொடர்பிலும் நிபுணத்துவமான கருத்துக்களை முன்வைக்கும் மக்கள் தலைவர் என்பதனால், இன்றும் அவரை இலக்கு வைத்து மலட்டுக் கொத்து, மலட்டு சத்திர சிகிச்சை என்பவற்றை அடிப்படையாக வைத்து ஏற்படுத்திய இனப்பிரிவினையை மீண்டும் உருவாக்க முயற்சிக்கின்றனர். இந்த அடிப்படைவாதம் நாட்டிற்கு பொறுத்தமற்றது. நடைமுறை பௌத்தராக புத்த பெருமானார் போதித்த தர்மத்திற்கு அமைவாக இன வேற்றுமையை ஏற்படுத்தாமல் இன மத சமூக பிரிவுகளிடையே ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் இலங்கையின் கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டார்கள். இதனால் பாதிக்கப்பட்ட, உயிரிழந்த குடும்பங்களுக்கு நீதி வழங்க வேண்டியது ஆட்சி அதிகாரம் அல்லது அரசியல் அடையாளத்தைக் காக்கும் வகையில் அல்லாமல் உண்மையை அறிந்துகொண்டு செயல்படுவதன் மூலமேயாகும். எனவே உண்மையை மையமாக வைத்து செயற்பட வேண்டும். இனவாதத்தை அடிப்படையாக வைத்து நாட்டை அழிக்கும் இந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *