உள்நாடு

மகவெவ குளத்தில் படகு சவாரி ஆரம்பிக்கப்பட்டது..!

புத்தளம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகாவெவ குளத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதற்கான புதிய வசதி ஞாயிற்றுக்கிழமை (05) மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த ஆரம்ப விழாவில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக மற்றும் நாத்தாண்டிய பிரதேச சபையின் தலைவர் சாகர விஜேசேகர உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நாத்தாண்டிய பிரதேச சபை, மகாவெவ பிரதேச செயலகம் மற்றும் மகாவெவ உற்பத்தி சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து இந்த சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

சிலாபம் – கொழும்பு பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள மகாவெவ குளம், ‘தனியவல்லப’ மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 169 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்தக் குளம், காலங்காலமாக விவசாய நடவடிக்கைகளுக்கும் நன்னீர் மீன்பிடித் தொழிலுக்கும் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

கடந்த காலங்களில் ‘ஜப்பான் ஜபர’ உள்ளிட்ட தேவையற்ற நீர்த் தாவரங்களால் சூழப்பட்டிருந்த இந்தக் குளம், சமீபத்தில் பிரதேச மக்களின் பெரும் முயற்சியால் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குளத்தை மையமாகக் கொண்ட ஒரு சுற்றுலாத் திட்டத்தை முன்னெடுக்க மகாவெவ பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்தது.

இந்தத் திட்டத்தின் கீழ், பயணிகள் தனித்தனியாகவோ அல்லது குழுக்களாகவோ படகு சவாரி செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நாத்தாண்டியா பிரதேச சபையின் நேரடிப் மேற்பார்வை மற்றும் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இப்படகு சேவையை, எதிர்காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

புதிய சுற்றுலா படகுச் சேவையின் ஆரம்பத்தை முன்னிட்டு, அப்பகுதி மீனவர்களுக்கு இடையிலான பாரம்பரிய ‘தெப்பம்’ வலிக்கும் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த புதிய முயற்சியானது பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *