தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25 வது ஆண்டு பூர்த்தி விழா..!
தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் நிறுவனத்தின் பணிப்பாளர் குழு அங்கத்தவர்கள், நிர்வாக சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து மத்ரஸாவின் 25 ஆண்டுகளின் பாரம்பரியம் மற்றும் சிறப்புமிக்க சேவையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வெள்ளி விழா நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணி முதல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் பிரதம அதிதியாகவும், சிறப்பு பேச்சாளராகவும் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் உஸ்தாத் ஏ.சி. அகார் முஹம்மத் கலந்து கொள்ளவுள்ளார். சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷெய்க் அர்கம் நூராமித், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முளப்பர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் மத்ரஸா மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மத்ரஸா பாடத்திட்ட அறிமுகம், பரிசளிப்பு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு உட்பட பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

