உள்நாடு

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு..!

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெற 9-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

தமிழ்நாடு அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணைய தலைவர் கடந்த மார்ச் 15-ந்தேதி வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்திற்கு ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் தேசிய கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஒரு கூட்டணியும் அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு தேசிய கட்சியான பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மற்றொரு கூட்டணியும் தேர்தலை சந்திக்கின்றன. நாம் தமிழர் கட்சி மற்றும் த.வெ.க. ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. இதனால், தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் 4
முனைப்போட்டி நிலவுகிறது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்), த.வெ.க. தலைவர் விஜய் (பெரம்பூர்), நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (காரைக்குடி) ஆகியோர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை கடைசி நாளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி (எடப்பாடி), தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா (விருத்தாசலம்), தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை (ஸ்ரீபெரும்புதூர்) உள்ளிட்ட வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். மேலும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். 8-வது முறையாக எடப்பாடி தொகுதியில் பழனிசாமி போட்டியிடுகிறார். 1989, 1991, 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் கே.பழனிசாமி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் இருந்தார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அப்போது மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் உடன் இருந்தார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மத்திய மந்திரியும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் உடனிருந்தார்.

அவிநாசி தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இந்நிகழ்வின்போது மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உடனிருந்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் எல்.முருகன் வழிபாடு செய்தார்.

மதுரை தெற்கு தொகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மதுரை தெற்கு தொகுதியில் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
திருப்போரூர் தொகுதியில் பாமக வேட்பாளர் பாலு வேட்புமனு தாக்கல் செய்தார்.காட்பாடி தொகுதியில் துரைமுருகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். 13-வது முறையாக காட்பாடியில் களம் காண்கிறார் துரைமுருகன்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் சேகர்பாபு வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் சிவசங்கர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தர்மபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் சவுமியா அன்புமணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஆயிரக்கணக்கானருடன் ஊர்வலமாக சென்று தாக்கல் செய்தார். கடலூர் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலுக்கு முன் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் வேட்பு மனுவை வைத்து பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார்.

மயிலம் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம். சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் மஜக வேட்பாளர் தமிமுன் அன்சாரி.

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் கௌதமசிகாமணி. தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி தனது வேட்புமனு தாக்கல் செய்தார்.

விசிக தலைவர் திருமாவளவனுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார் குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
விருதுநகரில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன். மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் மூர்த்தி

திங்கள்கிழமை கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியுள்ளது. எனவே கூட்ட நெரிசலை சமாளிக்க ‘டோக்கன்’ நடைமுறை பின்பற்றப்படுகிறது.

வேட்புமனுக்கள் முடிந்தவுடன் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெற உள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றாத மனுக்கள் நிராகரிக்கப்படும். உரிய மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். மனுக்கள் ஏற்கப்பட் டும் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிட விரும்பாதவர் கள் தங்கள் மனுக்களை திரும்ப பெறுவதற்கு 9-ந்தேதி கடை சிநாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.வாக்கு பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னங்களை பொருத்தும் பணிகள் 10-ந்தேதி தொடங்கும்.

இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ந்தேதி தொடங்கியது. திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இதன்படி, 3,196 ஆண்கள், 800 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 3,997 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனால், 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கலுக்கு அவகாசம் கிடைத்திருந்தது.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *