உள்நாடு

முஸ்லிம்களின் மூன்றாம் புனிதஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸா மூடப்பட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது..!

மஸ்ஜிதுல் அக்ஸா மிக உயர்ந்த மார்க்க மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புனிதஸ்தலமாகும். மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவிக்கு அடுத்ததாக உள்ள மூன்றாவது புனிதஸ்தலமாகும். மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணத்தில் சென்றடைந்த புனித இடமாகும்.

இப்புனிதஸ்தலமானது நபி இப்ராஹீம், நபி தாவூத், நபி சுலைமான், நபி ஈஸா (அலைஹிமுஸ்ஸலாம்) உள்ளிட்ட நபிமார்களுடன் தொடர்புடையதும், பல நூற்றாண்டுகளாக வழிபாட்டின் மையமாகவும் இருந்து வந்துள்ளது. மேலும், இது முஸ்லிம்களின் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகவும் விளங்குகின்றது.

இதனது உயர்ந்த ஆன்மீக மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக்காட்டும் வகையில் அல்-குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

“(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்! அவன் (முஹம்மது (ஸல்) என்னும்) தன் அடியாரை(க் கஅபாவாகிய) சிறப்புற்ற மஸ்ஜிதிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான். அதைச்சுற்றி நாம் அருள் புரிந்திருக்கிறோம். நம் அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அங்கு அழைத்துச் சென்றோம்). அவன்தான் நிச்சயமாக நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான். (அல்-குர்ஆன் – 17:1)

59 வருடங்களின் பின்னர் கடந்த சில வாரங்களாக இப்புனித இல்லம் முஸ்லிம்களுக்கு தொழுகை மற்றும் ஏனைய வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாதவாறு மூடப்பட்டிருப்பதை சமூக வலைத்தலங்கள் ஊடாக நாம் அறிவோம்.

இவ்வாறு இப்புனித இல்லத்தில் வணக்க வழிப்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்துவதும் வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள முடியாதவாறு முற்றாக மூடிவிடுவதும் அடிப்படை சமய சுதந்திரங்களை மீறுவதாகவும், அதன் புனிதத் தன்மையை அவமதிப்பதாகவும் உள்ளதுடன் உலக முஸ்லிம்களின் மனதையும் வெகுவாக பாதித்துள்ளது.

ஆகவே, உலகத் தலைவர்கள், முஸ்லிம் நாடுகள் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியோர் இணைந்து மஸ்ஜிதுல் அக்ஸாவை மீண்டும் திறப்பதற்கும் வழிபாட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகின்றது.

“அல்லாஹ்வின் அடையாளங்களை யார் மதிக்கிறார்களோ, அது நிச்சயமாக அவர்களது உள்ளத்தின் இறையச்சத்தை அறிவிக்கின்றது.” (அல்-குர்ஆன் – 22:32)

மேலும், குறிப்பாக பாலஸ்தீனில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தொடர்ச்சியான அநியாயமாகும். ஒடுக்குமுறை, இடம்பெயர்வு மற்றும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் தெளிவாகவும் மறுக்க முடியாதவையாகவும் உள்ளன. இத்தகைய அநியாயங்களை நாங்கள் வலுவாகக் கண்டிக்கின்றோம். இத்தகைய செயல்களை ஆதரிப்போரும் செயல்படுத்த உதவுவோரும் தங்கள் ஒழுக்க மற்றும் சட்டப் பொறுப்புகளை சிந்தித்து, நீதி, சமாதானம் மற்றும் மனித கண்ணியத்தின் பக்கம் நிலைநிற்க வேண்டும் என்று அழைக்கிறோம்.

அனைத்து சமூகங்களும், அறிஞர்களும், நிறுவனங்களும் சட்டபூர்வமான முறையில் குரல் கொடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, கண்ணியத்துடனும் ஞானத்துடனும் ஒழுக்க நெறிகளைப் பேணியவாறும் நீதிக்காக உறுதியாக நிற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

அல்லாஹ் மஸ்ஜிதுல் அக்ஸாவை பாதுகாத்தருளவும், அங்கே வணக்க வழிபாடுகளில் ஈடுபட முயல்பவர்களுக்கு இலகுவை வழங்கவும், உண்மை மற்றும் நீதியின் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தை ஒன்றிணைக்கவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

– நிறைவேற்றுக் குழு – ACJU –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *