நான் நேசிக்காத ஜே. ஆர் நூல் வெளியீட்டு விழா
முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆற்றிய ஜே.ஆர். ஜயவர்தன நினைவுப் பேருரையிலிருந்து தொகுக்கப்பட்ட “நான் நேசிக்காத ஜே. ஆர்” என்ற நூலும் அதன் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலான பதிப்பு நூல்களும் நேற்றுமுன்தினம் (30) மாலை கொழும்பு ஜே.ஆர். ஜயவர்தன கேந்திர நிலையத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, முன்னாள் சபாநாயகர்களான கரு ஜயசூரிய, மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல பிரமுகர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.
வெளியீட்டு வைபவத்தில், சிங்கள மொழியிலான நூல் தொடர்பான விமர்சனத்தை சர்வதேச ஊடக ஒத்துழைப்புக்கான ஆசிய பிராந்திய ஆலோசகரும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி ரங்க கலன்சூரியவும், தமிழ் நூல் தொடர்பான விமர்சனத்தை ஐக்கிய இராச்சிய இஸ்லாமிய அறக்கடளையின் தலைவரும், குழந்தைகள் நல விசேட வைத்திய நிபுணருமான டாக்டர் முஸ்தபா ரயீஸும், ஆங்கில நூல் குறித்தான விமர்சனத்தை வெலிகம மாநகர சபையின் முன்னாள் தவிசாளரும், அரசியல் செயற்பாட்டாளருமான ரெஹான் ஜயவிக்ரமவும் நிகழ்த்தினர்.







