புத்தளம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக ஜே. றழியுதீன் கடமைகளை பொறுப்பேற்றார்
புத்தளம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவை 1ஆம் தர பதவி நிலை உத்தியோகத்தரான திரு. ஜே. றழியுதீன் அவர்கள் கடமைகளை உத்தியோகபூர்வமா பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய ஆணையாளரை வரவேற்கும் நிகழ்வும், முன்னைய ஆணையாளருக்கான பிரியாவிடை நிகழ்வும் புத்தளம் மாநகர சபையின் முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
திரு. ஜே. றழியுதீன், 2012ஆம் ஆண்டு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டு நியமனம் பெற்றதுடன், அனுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை, நாச்சதுவ உள்ளிட்ட பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக பணியாற்றினார். தொடர்ந்து பதவிய பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராகவும் சேவை புரிந்தார்.
அதனைத் தொடர்ந்து வட மத்திய மாகாண சபைக்கு உள்வாங்கப்பட்ட இவர், மாகாண விளையாட்டு பணிப்பாளர், உதவி பிரதம செயலாளர், வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் (கல்வி), வட மத்திய மாகாண கூட்டுறவு திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் பதிவாளர் ஆகிய பொறுப்புகளில் சிறப்பாக சேவை புரிந்தார்.
இறுதியாக வட மத்திய மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சி பணிமனையின் பணிப்பாளர் (பயிற்சி) பதவியையும் வகித்தார்.
கல்வித் தகுதிகளாக இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், இலங்கை ராஜரட்ட பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகம் தொடர்பான முதுமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.
வெளிநாட்டு பயிற்சிகளாக இந்திய அரசின் புலமை பரிசிலான ITEC திட்டத்தின் கீழ் இந்திய தலைநகர் புது டெல்லியில் மூன்று மாதகால பயிற்சியை மேற்கொண்டதுடன், கடந்த வருடம் சீன அரசாங்கத்தின் பசுமை அபிவிருத்தி தொடர்பான பயிற்சி நெறியில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ஐவரில் ஒருவராகவும் விளங்குகிறார்.
திரு. ஜே. றழியுதீன் புத்தளம் காசிமிய்யாவில் மௌலவி பட்டம் பெற்ற மர்ஹூம் ஜகுபர்தீன் (மௌலவி, ஓய்வு பெற்ற அதிபர்) மற்றும் சக்கீனா பீவி தம்பதியினரின் புதல்வராவார்.
இலங்கை நிர்வாக சேவையில் 14 வருட கால சேவையை நிறைவு செய்துள்ள இவர், தனது பணிக்காலத்தில் அர்ப்பணிப்புடன் மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்துள்ளார்.



(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
