பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் கோரிக்கைக்குப் பலன்
தேசிய பாடசாலைகள் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு செயன்முறைப் பரீட்சை மற்றும் பொதுப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படாமல் இடைநிறுத்தப்பட்ட 200 ஆசிரியர்களின் நியமனங்களை மார்ச் 31 ம் திகதிக்கு முன் வழங்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் 18.02.2026 ம் திகதியன்று பிரதமரும், கல்வி, உயர் கல்வி அமைச்சருமான திருமதி. Dr. ஹரிணி அமரசூர்ய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.
கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தனது முன்மொழிவில் நாட்டின் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-1 (அ) ற்கு ஆட்சேர்ப்பு செய்தல் 2023/2025. தொடர்பான முன்மொழிவை முன்வைத்தார்
மேற்படி ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு 2359 இலக்கமும் 2023.11.17ம் திகதியும் கொண்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 2024.03.02ம் திகதி நடாத்தப்பட்ட எழுத்து மூல பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு சென்ற 2024.04.29, 30ம் திகதி மற்றும் 2025.05.02ம் திகதி தொடக்கம் 09ம் திகதி வரை கல்வி அமைச்சில் நடைபெற்ற செயன்முறை பரீட்சை மற்றும் பொது நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆசிரியர் வெற்றிடத்திற்கு நியமனம் செய்யும் பொருட்டு நியமன கடிதத்தினை பெற்றுக் கொள்வதற்காக சுமார் 200க்கு மேற்பட்டவர்களுக்கு கடந்த 2025.10.22ம் திகதி மு.ப. 09.00 மணிக்கு கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்திற்கு வருமாறு 2025.10.08 ம் திகதிய கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் 2025.10.10 ம் திகதிய கடிதம் மூலம் அந்நியமன நிகழ்வு குறித்த திகதியில் நடைபெறாது எனவும், பிறிதொரு திகதியினை அறிவிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இது வரையிலும் நியமனங்கள் வழங்கப்படாத நிலையில் தற்போது நாட்டில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புதிதாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. எனவே, நமது நாட்டின் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான வெற்றிடங்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-1 (அ) ற்கு ஆட்சேர்ப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கௌரவ பிரதம மந்திரியும், கலவி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான திருமதி. ஹரிணி அமரசூரிய அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்ற உறுப்பினரினால் முன்வைக்கப்பட்ட ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படாமைக்கான காரணங்களை தெளிவுபடுத்துமாறு கல்வி அமைச்சின் ஆசிரியர் நியமங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட உதவிச் செயலாளரை பிரதம மந்திரி கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் ஆசிரியர் நியமனங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட உதவிச் செயலாளர் விளக்கமளிக்கையில் தேசிய பாடசாலைகளில் நிலவும் 200 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கல்வி அமைச்சினால் செயன்முறைப் பரீட்சை மற்றும் பொது நேர்முக பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை எழுத்து மூலம் செயன்முறைப் பரீட்சை மற்றும் பொது நேர்முக பரீட்சைகள் நடாத்தப்பட்டு நியமனங்களை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சுக்கு சென்ற 2025.10.22 ம் திகதி மு.ப. 09.00 மணிக்கு நியமனக் கடிதத்தினை பெற வருகை தருமாறு எழுத்து மூலம் கல்வி அமைச்சினால் 200 ஆசிரியர்களுக்கு அறிவித்துவிட்டு 2025.10.10ஆம் திகதி அன்று கல்வி அமைச்சினால் நியமனங்கள் பெற இருந்த 200 ஆசிரியர்களின் நியமனங்கள் வழங்குவதற்கான வேறு ஒரு தினம் அறிவிக்கப்படும் என அறிவித்தும் இதுவரை 200 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படாமல் உள்ளது.
எனவே, எமது நாட்டின் தேசிய பாடசாலைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட ஆசிரிய நியமனங்கள் எப்போது வழங்கப்படும் என்பதனை கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன் தேசிய பாடசாலைகளுக்கு தெரிவு தெரிவு செய்யப்பட்ட 200 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படும் என பிரதம மந்திரி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பிரதம மந்திரி அவர்களுக்கு மக்கள் சார்பில் நன்றியினைத் தெரிவித்தார்.
பொத்துவில், உகன பிரதேசங்களில் புதிய கல்வி வலயங்கள் உருவாக்குதல் தொடர்பாக கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்ட முன்மொழிவு தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளரினால் எழுத்து மூலம் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் கௌரவ பிரதம மந்திரி அவர்களே என்னால் பொத்துவில், உகன பிரதேசங்களுக்கான புதிய கல்வி வலயங்கள் தொடர்பான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களினால் எனக்கு எழுத்து மூலம் அனுப்பப்பட்ட அறிக்கையில் புதிய கல்வி மறுசீரமைப்பின் போது உகனைக்கான புதிய கல்வி வலயம் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொத்துவில் பிரதேசத்திற்கான புதிய கல்வி வலயம் தொடர்பாக அறிக்கையில் குறிப்பிடப்படாதது குறித்து தனது அதிருப்தியை பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
இது தொடர்பாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் விளக்கமளிக்குமாறு பிரதம மந்திரி கேட்டுக் கொண்டார். கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் இது தொடர்பாக விளக்கமளிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையினால் கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட முன்மொழிவில் பொத்துவில், உகன பிரதேசங்களுக்கான புதிய கல்வி வலயங்கள் உருவாக்குவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது எனவும், இது தொடர்பான அறிக்கையில் உகன பிரதேசத்திற்கான கல்வி வலயம் மாத்திரம் உருவாக்குவது குறித்து மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். பிரதம மந்திரி அவர்கள் புதிய கல்வி வலயங்கள் உருவாக்கும் முன்மொழிவு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ள பொத்துவில், உகன பிரதேசங்களை இணைத்து கல்வி அமைச்சின் அறிக்கையை திருத்தி அனுப்புமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கினார்.
