உள்நாடு

தேர்தல் காலங்களில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஆளும் கட்சி நிறைவேற்ற வேண்டும்; அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை

முன்னாள் ஜனாதிபதிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சிறப்பு உரிமைகளை இல்லாமல் செய்வதற்கு தங்களுக்கு மக்களின் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறும் ஆளுங்கட்சியினர் தேர்தல் காலங்களில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் நமது நாட்டு மக்களுக்கு ஆளும் கட்சியால் வழங்கிய மிக முக்கியமான விடயங்கள் 01 வருடம் சென்று நிலையிலும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் தென்னக்கோன் அவர்களை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தத்தினை கொண்டு வந்தீர்கள் எதிர்க்கட்சியினர்களும் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தென்னக்கோனை நீக்குவதற்கு வாக்களித்தோம். காலை பாராளுமன்றத்தில் தென்னக்கோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரனை முன்வைக்கப்பட்டு அதே தினம் பிற்பகலின் சபாநாயகரின் சட்டம் ஆக்கப்படுவதற்கு சிபாரிசு செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் தென்னக்கோனை பதவியில் இருந்து ஒரே நாளில் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டது போல் நீங்கள் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தலில் நமது நாட்டு மக்களுக்கு வழங்கிய பெரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறைமை எப்படி உருவாக்கப்பட்டது என்ற வரலாறு தொடர்பாக இச்சபையில் சில விடயங்களை முன் வைக்கலாம் என நினைக்கின்றேன்.

நமது நாட்டின் பிரதம மந்திரியாக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பதவி வகித்த காலத்தில் இலங்கையின் இலவச கல்வியின் தந்தை C.W.W. கண்ணங்கரா அவர்கள் நமது நாட்டு மக்களுக்கு பெரும் பணி செய்துவிட்டு பொருளாதார கஷ்டம் தனக்கு ஏற்பட்ட போது 1976 ஆம் ஆண்டு அப்போதைய பிரதம மந்திரியாக பதவி வகித்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களிடம் தனக்கு 500 ரூபாய் பணம் வழங்குமாறு கோரியுள்ளார். இதன் பின் C.W.W. கண்ணங்கரா பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களிடம் 10,000 ரூபாய் பணம் வழங்குமாறு கோரியுள்ளார். அதன்பின் அமைச்சருக்கு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களினால் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்பு 1977 ஆம் ஆண்டிலிருந்து நமது நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களாக 05 வருடங்கள் பூர்த்தி செய்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றது.

இந்த நிலையில் அமைச்சர் சமரசிங்க அவர்கள் மக்கள் மத்தியில் உரையாற்றிய போது எமது அரசாங்கம் பதவிக்கு வந்தால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளை இல்லாமல் செய்வோம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தினை இல்லாமல் செய்வோம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன பேர்மிட்டை இல்லாமல் செய்வோம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் பாதுகாப்பினை இல்லாமல் செய்வோம் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். நீதி நியாயங்களுக்காக போராட்டங்களை நடாத்தி ஆட்சிக்கு வந்த ஆளுங்கட்சியினர்களுக்கு மிக முக்கியமான விடயத்தை நினைவுபடுத்துகிறேன்.

எதிர்காலத்தில் எமது நாட்டில் நீதி நியாயத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர்களாக வந்து நமது மக்களுக்கு சேவை செய்யும் முறைமை தற்போது இல்லாமல் செய்யப்பட்டு அரசியல் ரீதியாக பெரும் கோடீஸ்வரர்களாக உள்ளவர்களும் பெரும் பண பலம் உள்ள அரசியல் கட்சிகளில் உள்ளவர்களும், பரம்பரையாக பெரும் பணமுள்ளவர்கள் மாத்திரம் நமது பாராளுமன்ற உறுப்பினராக வரக்கூடிய புதிய முறையை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எமது ஜனநாயக ரீதியிலான அரசியல் பாதைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற யதார்த்தத்தினை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் 04 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்தில் ஜனநாயக ரீதியில் இயங்கி 159 ஆசனங்களை பாராளுமன்றத்தில் பெற்று இன்றைய ஆளும் கட்சியினர் எதிர்காலத்தில் பெரும் கோடீஸ்வரர்கள் மாத்திரம் பாராளுமன்றம் வரக்கூடிய வகையில் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை குறித்து கவலைப்பட வேண்டியுள்ளது.

நமது நாட்டில் ஓய்வூதியம் பெரும் 675,254 பேர் உள்ளனர். வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள காலகட்டத்தில் நமது நாட்டில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கொடுப்பனவினை அதிகரிப்பதற்கான அவசர ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் 18வது, 19வது, 20வது சரத்துக்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தங்களின் இலக்குகளை அடைந்து கொண்டனர். அந்த நிலைமையில் முஸ்லிம் சமுதாயம் வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபய ராஜபக்சே ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட போது மௌனமாக இருந்தார்கள். இப்பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தன்னந்தனியாக நின்று எமது முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுத்தார்கள்.

கோத்தாபய ராஜபக்சே இன்னும் 40 வருடங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்பார் என்று சொல்லிவிட்டு கோத்தாபய ஜனாதிபதியுடன் நாங்கள் வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிய எங்களின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்றார்கள்.

அதேபோன்று நீங்கள் இன்னும் 20 வருடங்கள் ஆட்சியில் இருக்கலாம் என நம்புகிறீர்கள். நமது நாட்டை பொறுத்தவரை ஒரு நாளில் இவை எல்லாம் மாறிவிடும் இன்னும் ஒரு ஆட்சி வந்தால் நீங்கள் இன்று எடுத்த தீர்மானத்தை ஒரு மணித்தியாளத்திற்குள் பாராளுமன்றத்தை கூட்டி இரத்துச் செய்து சிலவேளை இன்று ஆளும் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 159 பேருக்கும் இவ் ஓய்வூதியம் வழங்கலாம் என்ற யதார்த்தத்தினையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகளால் தான் ஆளுங்கட்சிக்கும் பொதுத்தேர்தலில் 08 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக முழுமையாக பயங்கரவாத சட்டம் நீக்கப்படும் எனக் கூறினீர்கள். ஒரு வருடம் சென்று நிலையிலும் அந்த வாக்குறுதி இன்றும் நிறைவேற்றப்படவில்லை. தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினை பயன்படுத்தி கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் தங்களின் அரசியல் இருப்பினை பாதுகாப்பதற்காகவே பயங்கரவாத சட்டத்தினை பாவித்தனர். அன்று பயங்கரவாத சட்டத்திற்கு எதிராக போராடிய இன்றைய ஆட்சியாளர்கள் பயங்கரவாத சட்டத்தினை நீக்காமல் செயற்பட்டு வருவது குறித்து கவலைப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான சட்டமூலம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படை குறைபாடுகளை சரி செய்யவில்லை எனவும் சர்வதேச சட்டங்களுடன் ஒத்துப் போகும் அளவில் குறிப்பிடத்தக்க அளவில் பூர்த்தி செய்யப்படவில்லை எனவும் இது தொடர்பாக ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் 07 சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் பணிக்குழுக்கள் கூட்டாக அறிக்கை செய்துள்ளனர்.

நடைமுறையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விடவும் பாரதூரமான வகையில் மிக மோசமான விதத்தில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் கட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது ஆளும் கட்சியினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அது சட்டமாக்கப்பட்டால் நமது நாட்டின் ஜனநாயகம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

எனவே இந்த விடயத்தில் கடந்த கால ஆட்சியாளர்களைப் போல் செயற்பட்டு மக்களின் எதிர்ப்பினை சந்திக்காத வகையில் பயங்கரவாத சட்டத்தினை திருத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் மக்களுக்கு வழங்கிய முக்கியமான வாக்குறுதிகளும் நமது நாட்டிற்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனவும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும், உரிய காலத்தில் தேர்தல்கள் நடாத்தப்படும், நமது நாட்டிலுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை மாற்றப்படும் எனவும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் இவைகள் நிறைவேற்றப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதனை நான் நினைவுபடுத்துகிறேன். நீங்கள் தேர்தல் காலங்களில் நமது நாட்டு மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை நாங்கள் உங்களுக்கு நினைவூட்ட வேண்டிய ஜனநாயக பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்பதனை ஆளும் கட்சியினர் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

நமது நாட்டின் நலனுக்காகவும் நமது மக்கள் நன்மையடையக்கூடிய விடயங்களுக்கும் எப்போதும் எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். நீங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நம்பி குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சியினருக்கு வாக்களித்தனர். வரலாற்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 08 தமிழ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் வாக்களித்து தெரிவு செய்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்கள் முன்னாள் அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்டு வேதனையால் தான் இந்த தடவை அனுரகுமார திசநாயக்கவுக்கு வாக்களித்து நமது பிரச்சனைகளுக்கு தீர்வுகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தினால் தான் ஜனாதிபதி அவர்களுக்குரிய ஆளும் கட்சியினருக்கும் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்கள் வாக்களித்தார்கள் என்பதனை மறந்து விடாதீர்கள்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ 1 1/2 வருடத்தினை நிறைவு செய்யப் போகின்றீர்கள் வடக்கு, கிழக்கு மாகாண சமூகங்களுக்கான அரசியல் தீர்வினை இதுவரை நீங்கள் முன்வைக்கவில்லை என்பதனை கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்களும் முன்னாள் அரசியல் தலைவர்களைப் போல் வடக்கு, கிழக்கு மக்களின் நியாயமான பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காணாமல் விட்டால் அந்த மக்கள் ஜனாதிபதி அவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை வீணாக்கப்பட்டுவிடும் என்பதனை ஆளும் கட்சியினருக்கு தெரிவித்துக் கொள்கின்றேன். எனவே, இந்த விடயத்தில் அவசரமான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நமது நாட்டின் 78வது சுதந்திர தினம் சிறப்பாக கொழும்பில் கொண்டாடப்பட்டது நாங்கள் கடந்த காலங்களில் யுத்த சூழ்நிலையில் சுதந்திர தினங்கள் கொண்டாடப்படக்கூடாது என்ற நிலையிலும் கூட நாற்றுப்பற்றுடன் சுதந்திர தின விழாக்களிலும் கலந்து கொண்டிருக்கின்றோம்.

சுதந்திர தின விழா கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது நாங்களும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டோம். கடந்த 30 வருட கால யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுதந்திர தினத்தை கொண்டாடுவதனை புறக்கணித்து இருந்தனர். வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களினால் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்பதற்காக நமது நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கரி நாளாக பிரகடனப்படுத்தும் நிலைமையை உருவாகியுள்ளது. எனவே ஆளுங்கட்சியினால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியையும், இத்தாக்குதலுக்கு பொறுப்பாக இருந்த நபர்களையும், சக்திகளையும் இனங்கண்டு குண்டு வெடிப்பினால் பாதிப்படைந்த கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்களுக்கும் இனவாத குழுக்களால் பாதிப்படைந்துள்ள முஸ்லிம் மக்களுக்கும் நீதி கிடைக்க ஆளுங்கட்சியினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *