தோனியால் மீண்டும் கிரிக்கெட்டிற்குள் வந்த பாகிஸ்தான் வீரர்
இந்திய அணியின் முன்னாள் அணிதலைவர் எம்.எஸ். தோனியால்தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன் என்று பாகிஸ்தான் சுழல்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக் கூறியுள்ளார்
நடைபெற்றுவரும் 10ஆவது ரி20 உலகக் கிண்ணத்தில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுடனான போட்டியில் மட்டும் தோல்வியடைந்தது.
பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் பந்துவீசும் போது சில நொடிகள் நின்றுவிட்டு வீசுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. சிறப்பாக பந்துவீசி எதிர் அணி வீரர்களை உஸ்மான் தாரிக் திணறிடித்து வருகிறார்.
சமீப கால கிரிக்கெட் உலகில் பேசுபொருளாக மாறியுள்ள உஸ்மான் தாரிக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர்,
“எம்.எஸ்.தோனி திரைப்படம் பார்த்த பிறகுதான் மீண்டும் கிரிக்கெட்டிற்கு வந்தேன். அந்தப் படத்தைப் பார்த்த பிறகு, எங்கள் இருவரது கதைகளும் ஒரே மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் ஒரு வேலையில் இருந்தேன், அவரும் ஒரு வேலையில் இருந்தார். வரலாறு படைத்த ஒருவர் இங்கே இருக்கிறார் என உணர்ந்தேன்.
நானும் சாதாரண மனிதன்தான். அதே பாதையை நான் தொடரலாம், ஆனால் மற்றவர்களைப் போல நான் நிறைய கடின உழைப்பு செலுத்த வேண்டும். எம்.எஸ்.தோனியால்தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன்” என தெரிவித்தார்.
