இன்று இந்தியா பயணமாகிறார் ஜனாதிபதி அநுர
2026 செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கமைய, ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை மறுதினம் உரையாற்றவுள்ளார்.
ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.
மேலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
