Uncategorizedஉள்நாடு

பொத்துவில் அஸ்மினின் வரிகளில் “கலாம், கலாம்” பாடல் வெளியீடு

மனஅழுத்தம், தோல்வி, நம்பிக்கை இழப்பு போன்ற காரணங்களால் தற்கொலை எண்ணங்களில் சிக்கிக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இன்றைய சூழலில், மனித மனங்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் அளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள “கலாம் கலாம்” என்ற ஊக்கப் பாடல் உலகளவில் வெளியிடப்பட்டுள்ளது.(14)

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் அறிவியல் மேதை டாக்டர் ஏ.பீ.ஜே.அப்துல் கலாம் அவர்களின் நினைவாக, சர்வதேச அளவில் அறியப்பட்ட இலங்கை தமிழ் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

வாழ்க்கையில் தோல்வி, மனச்சோர்வு மற்றும் விரக்தியால் பாதிக்கப்படும் நபர்களுக்கு மீண்டும் எழும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வழங்கும் ஒரு வாழ்க்கைச் செய்தியாக இப்பாடல் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு உலக தற்கொலை தடுப்பு தினமான செப்டம்பர் 10-ஐ முன்னிட்டு உருவாக்கப்பட்ட இந்தப் பாடல், மனநல விழிப்புணர்வை சமூகத்தில் பரப்பும் சமூகப் பொறுப்புள்ள முயற்சியாக கருதப்படுகிறது. “நீ துணிந்தால் ஜெயிக்கலாம்”, “இங்கே எதுவும் நடக்கலாம்” போன்ற வரிகள் மூலம் வாழ்க்கையை நேர்மறையாக அணுகும் நம்பிக்கைச் செய்தியை இப்பாடல் வலியுறுத்துகிறது.

இப்பாடலை இலண்டன் வாழ் தொழிலதிபரும் சமூக சேவகருமான டாக்டர் மாலா குமார் தயாரித்துள்ளார். தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் P.C. சிவன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸ் தனது உணர்வுபூர்வமான குரலில் பாடியுள்ளார்.

தரமான இசையும் ஆழமான வாழ்க்கைச் சிந்தனைகளும் கொண்ட பாடல்கள் குறைந்து வரும் நிலையில், “கலாம் கலாம்” மனித மனங்களில் நம்பிக்கையின் ஒளியை பரப்பும் ஒரு அர்த்தமுள்ள படைப்பாக பாராட்டப்படுகிறது.

இப்பாடல் தற்போது உலகமெங்கும் வெளியிடப்பட்டுள்ளதுடன், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும், இளைஞர்கள் தங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்துமாறு படைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மனச்சோர்வு அல்லது வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளும் ஒவ்வொருவரிடமும் தைரியம், நம்பிக்கை மற்றும் நேர்மறை சிந்தனையை பரப்புவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இது வெறும் பாடல் மட்டுமல்ல வாழ்க்கையை நேசிக்கவும், சவால்களை தைரியமாக சமாளிக்கவும், கனவுகளை நனவாக்கும் உறுதியுடன் முன்னேறவும் ஊக்கமளிக்கும் ஒரு முக்கியமான சமூக விழிப்புணர்வு முயற்சியாகும்.

(றிபாஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *