களுத்துறை முஸ்லிம் லீக்கின் கல்வி விவகாரக் குழு உறுப்பினர்கள் ஆளுனர் ஹனீப் யூசுப் சந்திப்பு.

களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளில் சம்மேனத்தின் கல்வி விவகாரக் குழு உறுப்பினர்கள் நேற்று (09) மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களைச் சந்தித்து, களுத்துறை மாவட்டத்தில் காணப்படும் 21 முஸ்லிம் பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவி வரும் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட ஏனைய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இதற்கு முன்னர் மேல் மாகாண கல்வி விவகார செயலாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை அமுல்படுத்தத் தவறிய விவகாரம் மற்றும் தீர்க்கப்படாத ஆசிரியர் பிரச்சினை குறித்து இன்று மீண்டும் ஆராய்ந்து ஆலோசிக்கப்பட்டன. கிட்டிய காலத்தில் ஆட்சேர்ப்பு செய்யவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தொகுதியில், தற்போது நிலவும் சகல வெற்றிடங்களும் முறையாக நிரப்பப்படும் என்று மாகாண கல்வி அதிகாரிகள் இதன்போது உறுதியளித்தனர்.
பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த ஆசிரியர் வெற்றிடங்களை இந்த ஆண்டு நிவர்த்தி செய்து தரப்படும் என்று கூறப்பட்டதோடு, இது தொடர்பாக அவசர அறிக்கை ஒன்றைப் பெற்றுத் தருமாறு களுத்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் மேல் மாகாண ஆளுநர், மேல் மாகாண பிரதம செயலாளர், மேல் மாகாண பிரதம கணக்காளர், மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் களுத்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
களுத்தறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கல்விக் குழு உறுப்பினர்களாக அதிபர் பி.எம்.எம். ஜாபிர், அதிபர் எம்.ரிஸ்மி மஹ்ரூப், எம்.எச்.எம். இஹ்சான் மற்றும் முஹம்மது நஸ்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
( பேருவலை எம்.பீ.எம்.முக்தார்)
