உள்நாடு

திருச்சியில் இலங்கை தம்பதிக்கு பிறந்தவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு..!

திருச்சியில் இலங்கை தம்பதிக்கு பிறந்தவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த. கோகுலேஸ்வரன், தனக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்து நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் 1986-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்துள்ளார். அவரது பெற்றோர் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் தஙகியுள்ளனர். தான் இந்தியாவில் பிறந்ததால் குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3-ன் படி பிறப்பால் இந்திய குடியுரிமை பெற்றவர் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த நிலையில், காவல்துறை தரப்பில் அவர் இலங்கையை சேர்ந்தவராக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அவரிடம் மீண்டும் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், மனுதாரர் விளக்கம் அளித்தும் தீர்வு காணப்படவில்லை என்பதால் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். மாற்றுச் சான்றிதழ், பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல், பிறப்புச் சான்றிதழ், ஆதார் ஆகியவற்றை சமர்ப்பித்துள்ளார். மனுதாரரின் பிறப்புச் சான்றிதழ் உண்மையானது என திருச்சி மாநகராட்சி தரப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத்தின்படி 1987 ஜூலை 1-ம் தேதிக்கு முன் இந்தியாவில் பிறந்தவர், பெற்றோர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், அதனைக் கருத்தில் கொள்ளாமல் இந்திய குடிமையாளர் இன்றைய கருதப்படுவார் எனக் குறிப்பிடுகிறது. இந்த வழக்கைப் பொருத்தவரை மனுதாரர் 1987 ஜூலை மாதத்திற்கு முன்பு பிறந்தவர் என்பதால் சட்டப்படி அவர் இந்திய குடிமையாளர். அதனை சான்றுகளும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்கின்றன.

இந்நிலையில், அவரது பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பது சட்டவிரோதமானது. ஆகவே உத்தரவு நகரில் கிடைக்கப்பெற்றதிலிருந்து 8 வாரங்களுக்குள்ளாக மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *