பாபரின் அசத்தல் சதத்தினால் இலங்கைக்கு எதிரான தொடரை வென்றது பாகிஸ்தான்
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாமின் அசத்தலான சூத்தின் மூலம் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க தொடரை 2:0 என வெற்றி கொண்டது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றிருக்க இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நேற்று (14) ராவல்பிண்டியில் இடம்பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணிசார்பில் துடுப்பாட்டத்தில் ஜனித் லியனகே 54 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 42 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் அப்ரார் மற்றும் ஹரிஸ் ரௌப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்தநிலையில் 289 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணிசார்பில் துடுப்பாட்டத்தில் பாபர் அசாம் 102 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். 83 இன்னிங்ஸ் மற்றும் 807 நாட்களின் பின்னர் சதம் ஒன்றை பாபர் அசாம் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 2: 0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி முன்னிலை வகிக்கின்றது.
மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி நேற்று இடம்பெறவிருந்த நிலையில் இன்றைய தினம் வரை பிற்போடப்பட்டிருந்தது.
பாகிஸ்தானில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்புவதற்கான கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.
பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இலங்கை அணியின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த தொடரை திட்டமிட்டவாறு முழுமையாக விளையாடி நிறைவு செய்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அதற்கமைய இன்றைய தினம் இலங்கை அணி வீரர்கள் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
