2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஒப்பந்தம் இலங்கை – சவுதி அரேபியாவிற்கிடையில் கைசாத்திடப்பட்டது
நவம்பர் 9, 2025 ஞாயிற்றுக்கிழமை, சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் 2026 ஹஜ் யாத்திரைக்கான இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தமானது இலங்கை மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் திரு. முனீர் முளப்பர் மற்றும் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா பிரதி அமைச்சர் திரு. அப்துல்பத்தா பின் சுலைமான் மஷாத் ஆகியோர்கிடையில் கைசாத்திடப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான இலங்கை ஹஜ் யாத்திரிகர்களுக்கான வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் இவ் ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது. நேற்று கைசாத்திடப்பட்ட இவ் ஒப்பந்தத்தின்படி, இலங்கைக்கான அதிகாரப்பூர்வ ஹஜ் கோட்டா 3,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இச் சந்தர்ப்பத்தில், 2025 ஹஜ் யாத்திரையை வெற்றிகரமாக முடிப்பதற்கு சவுதி அதிகாரிகள் செய்த சேவைகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் நன்றியை பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துக்கொண்டதுடன் ,2026 இல் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்துடன் இணைந்து வினைத்திறனான ஹஜ் சேவையை உருவாக்க இலங்கை தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் நாட்டில் ஹஜ் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், குறிப்பாக ஹஜ் சட்டம் குறித்து பிரதி அமைச்சர் விளக்கினார். இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் திரு. ரியாஸ் மிஹ்லர், குழுவின் பங்கு மற்றும் எதிர்வரும் ஹஜ் யாத்திரைகளுக்காக செயல்படுத்தப்படும் செயல்முறைகள் குறித்தும் விளக்கினார்.
இதேவேளை, பிரதியமைச்சர் முனீர் முளப்பர் சவூதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் தௌபீக் பௌஸான் அல் ரபியாவை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் ஹஜ் சேவை வழங்குனர்களுடன் கலந்துரையாயாடுவதற்கும் உத்தேசித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் திரு எம்.எஸ்.எம். நவாஸ், ஜித்தவில் உள்ள பதில் தூதர் மஃபூசா லாபீர், வைத்தியர் அசிஸ் முகமது ஷிஹான் மற்றும் கலாநிதி எம்.என்.எம். அஷ்ரஃப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



(ரிஹ்மி ஹக்கீம்)
