உள்நாடு

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் 2ஆம் நாள் இன்று

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று (10) நடைபெறுகிறது.

இவ்விவாதம் மொத்தம் ஆறு நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், அதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் இடம்பெறும். இதற்கான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, ஒவ்வொரு நாளும் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் எனவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் மொத்தச் செலவு 4,434 பில்லியன் ரூபாவாகும். இதில் அதிகபட்ச நிதி ஒதுக்கீடு 634 பில்லியன் ரூபாவாக நிதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபாவும், பொது நிர்வாக அமைச்சுக்கு 596 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபா, பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபா, கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செலவுத் தலைப்புக்காக 11 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 2.7 பில்லியன் ரூபாவை விட சுமார் 8 பில்லியன் ரூபா அதிகம் ஆகும்.

இந்த அதிகரிப்புக்கான முக்கிய காரணமாக 2026 ஆம் ஆண்டில் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 8.29 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்படுகிறது.

மேலும், 2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஓய்வூதியங்களுக்காக 488 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2026 ஆம் ஆண்டுக்கான செலவினங்களை ஈடுசெய்வதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெறக்கூடிய அதிகபட்ச கடன் வரம்பு 3,800 பில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்த வரம்பை மீறக் கூடாது என்றும் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *