தலதா மாளிகை தியவதன நிலமேயாக மீண்டும் பிரதீப் நிலங்க தெல
கண்டியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் மிக உயரிய பதவியான தியவதன நிலமே பதவிக்கு, தற்போது பதில் தியவதன நிலமேயாகச் செயற்பட்டு வந்த பிரதீப் நிலங்க தேல மூன்றாவது முறையாகத் தெரிவு செய்யப்பட்டு, மீண்டும் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், இப்பொறுப்பை மிக நீண்ட காலம் வகித்தவர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஸ்ரீ தலதா தேரரின் பாதுகாவலரை )தியாவதான நிலமே) நியமிப்பதற்கான தேர்தல், வெள்ளிக்கிழமை (7) கண்டி செங்கடகல பௌத்த மண்டபத்தில் நடைபெற்றது. பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம். காமினி செனவிரத்ன தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.
இம்முறை தெரிவுக் கூட்டத்தில் மகா சங்கத்தினர் உட்பட சுமார் 267 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் மல்வத்து மற்றும் அஸ்கிரி விகாரைகளின் மகா நாயக்க தேரர்கள், ரஜமகா விகாரைகளின் பொறுப்பாளர்கள், 71 பிரதேச செயலாளர்கள் மற்றும் 29 தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமேக்கள் ஆகியோரும் அடங்குவர்.
இந்தத் தேர்தலில், நிலங்க தேலவுக்குப் போட்டியாக ஏழு பேர் களத்தில் இருந்தனர். இவர்களில் கண்டி கதிர்காம மகா தேவாலய பஸ்நாயக்க நிலமே தாமின்த பண்டார உதுராவண, கண்டி நாத தேவாலய பஸ்நாயக்க நிலமே ஏ.டபிள்யூ.எஸ் பண்டாரநாயக்க மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திலக் சுபசிங்க ஆகியோரின் பெயர்கள் முக்கியமாகப் பேசப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், திரு. பிரதீப் நிலங்க தேல அவர்கள் மொத்தமுள்ள 267 வாக்குகளில் 195 வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திரு. தமிந்த உதுரவன 50 வாக்குகளையும், திரு. ஏ.டபிள்யூ.எஸ். பண்டாரநாயக்க 13 வாக்குகளையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம், விகாரை தேவாலயகம கட்டளைச் சட்டத்தின் கீழ், திரு. பிரதீப் நிலங்க தேல அடுத்த 10 வருட காலத்திற்கு, அதாவது 2035 ஆம் ஆண்டு வரை இந்தப் பதவியை வகிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
அவர் ஏற்கனவே 2005 ஆம் ஆண்டு 199 வாக்குகளுடனும், 2015 ஆம் ஆண்டு 205 வாக்குகளுடனும் இந்தப் பதவிக்குத் தெரிவாகியிருந்த நிலையில், மூன்றாவது தடவையாகத் தியவதன நிலமேயாக நியமிக்கப்பட்டதன் மூலம், ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேயாக மிக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற வரலாற்றுச் சாதனை அவர் வசம் ஆகியுள்ளது.
கண்டி இராச்சியம் ஆங்கிலேயரிடம் வீழ்ச்சியடைந்ததிலிருந்து இப்பதவியை இதுவரை 19 பேர் மட்டுமே அலங்கரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(எம்.ஏ.அமீனுல்லா )
