ஹொங்கொங் சிக்ஸஸ்; 6ஆவது முறையாகவும் மகுடம் சூடியது பாகிஸ்தான், போவ்ல் கிண்ணம் இலங்கை வசம்
நடப்பாண்டிற்கான ஹொங்கொங் சிக்ஸஸ் தொடரின் இறுதிப் போட்டியில் குவைத் அணியை 43 ஓட்டங்களால் வீழ்த்திய பாகிஸ்தான் அணி 6ஆவது முறையாகவும் சம்பியன் கிண்ணத்தை வெற்றி கொண்டு அசத்தியது.
12 அணிகள் பங்கேற்ற சிக்ஸர் மழை பொழிகின்ற நடப்பு ஆண்டிற்கான ஹொங்கொங் சிக்ஸஸ் தொடர் கடந்த 7 ஆம் திகதி முதல் இன்று (9) வரை இடம்பெற்று வந்திருந்தது.
இதில் முதல் சுற்று லீக் ஆட்டத்தில் ஒரு குழுவில் 3 அணிகள் வீதம் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இடம்பெற்றது. இதில் குழு நிலையில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்று பின்னர் அரையிறுதி போட்டிகள் இடம்பெற்றன.
அதற்கமைய முதல் அரையிறுதியில் பலமிக்க அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. பின்னர் இடம்பெற்ற 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய குவைத் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
அதற்கேற்ப இடம்பெற்ற தீர்மானமிக்க இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற குவைத் அணி பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.
அதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 6 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் அப்பாஸ் அப்ரீடி 11 பந்துகளில் 52 ஓட்டங்களையும், ஸமட் 13 பந்துகளில் 42 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பாவ்சர் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பின்னர் 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய குவைத் அணி 5.1 ஓவர்களில் சகல (6) விக்கெட்டுகளையும் இழந்து 92 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 43 ஓட்டங்களால் தோற்றுப் போனது. இதனால் பாகிஸ்தான் அணி 6ஆவது முறையாகவும் ஹொங்கொங் சிக்ஸஸ் சம்பியன் மகுடத்தை தனதாக்கி அசத்தியது. துடுப்பாட்டத்தில் பாவ்சர் 13 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மாஸ் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
மேலும் முதல் சுற்றில் தோல்வியடைந்த அணிகள் மோதிய போவ்ல் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணியை 21ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை அணி 4ஆவது முறையாக போவ்ல் கிண்ணத்தை வெற்றி கொண்டது. இப் போட்டியின் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் பதிலளித்த ஐக்கிய அரபு இராச்சிய அணி 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 85 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து இடம்பெற்ற காலிறுதிப் போட்டிகளில் தோற்ற அணிகளுக்கான ப்ளேட் கிண்ண இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ப்ளேட் கிண்ணத்தை வெற்றி கொண்டது போட்டிகளை நடாத்திய ஹொங்கொங் அணி.
(அரபாத் பஹர்தீன்)
