மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானம் இன்று
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சார சபை கடந்த செப்டெம்பர் மாதம் முன்வைத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (14) இறுதித் தீர்மானம் எடுக்குமெனவும் அந்தத் தீர்மானம் இன்று அறிவிக்கப்ப டுமென்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்சார சபை கோரியுள்ள 6.8 சதவீத மின் கட்டண அதிகரிப்பு அவ்வாறே கிடைக்குமா, இல்லையா? என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த கட்டண அதிகரிப்பு அநேகமாக 6.8 சதவீதத்துக்கும் குறைவாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் 08 யோசனைகளின் அடிப்படையில் தற்போது வரையில் மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், அதன்போது மின்சார சபையினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள மின்சார உற்பத்தி செலவு, எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களில் கொள்வனவு செய்யும் செலவு, விநியோக செலவு மற்றும் கடன் செலுத்துவதற்கு மின் கட்டணத்தினூடாக நிதி இருப்பை திரட்டல் ஆகிய காரணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதன்போது எரிபொருளில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களில் மின் கொள்வனவு செய்தல் மற்றும் பழைய கடன்களை மீளச் செலுத்துவதற்கு மேற்கொண்டுள்ள யோசனை தொடர்பில் கடும் எச்சரிக்கை நிலைமை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் வசந்த எதிரிசூரிய, கடந்த செப்டெம்பர் மாதம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் மின் கட்டணத்தை அதிகரிக்க கோரி திட்டமொன்றை சமர்ப்பித்திருந்தார். இந்த மாதம் (ஒக்டோபர்) முதல் டிசம்பர் வரையிலான மதிப்பிடப்பட்ட பற்றாக்குறையை சமாளிக்க இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 17,694 மில்லியன் ரூபா அல்லது சுமார் 1,769 கோடி ரூபா பற்றாக்குறையாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதனை ஈடுசெய்வதற்கு மின்சாரக் கட்டணம் 6.8 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது