உள்நாடு

இல்லத்தரசிகளுக்கு கசந்தது தேசிக்காய்: பாதியின் விலை 100 ரூபாய்



சமீப ஒரு சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகரம் உட்பட பல பிரதேசங்களில் தேசிக்காயின் விலை ஒரு கிலோகிராம் 2500 ரூபாய் என்ற அளவில் உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதனால் கறிக்கும் இன்ன பிற உணவுகளுக்கும் நாவுக்குச் சுவையாக தேசிப் புளியைச் சேர்த்துக் கொள்ள முடியாமல் இல்லத்தரசிகள் அங்கலாய்க்கின்றனர்.


தேசிக்காய் கேட்டு கடைக்கு வருவோரை திருப்பி அனுப்ப முடியாத மரக்கறி வியாபாரிகள் கடைகளில் தேசிக்காயை வெட்டி வைத்து பாதியொன்றை 100 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகவும் அதனைக் கூட இல்லத்தரசிகள் விரும்பி வாங்கிச் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர். சிலவேளைகளில் பாதித் தேசிக்காய் கூட இல்லாத தட்டுப்பாடு நிலவுதாகவும்; தெரியவந்துள்ளது.


இந்த மாதிரியாக தேசிக்காய் விலை உச்சத்தைத் தொட்டது இலங்கைச் சரித்திரத்தில் இதுவே முதற் தடவை என்று மரக்கறி வியாபாரிகளும் இல்லத்தரசிகளும் தெரிவிக்கின்றனர்.
தேசிக்காய் உற்பத்தி குறைந்தமைக்கு இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நிலவிய கடும் உஷ்ணமான காலநிலையும் வறட்சியுமே காரணம் என்று தெரிவிக்கும் விவசாயத்துறையினர் அடுத்த மாதமளவில் தேசிக்காயின் விளைச்சல் போதியளவு இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *