“ஆசிரியர் தினம்” கல்வி மூலம் சமூக மாற்றம்
ஆசிரியர் தினம் இலங்கையில் ஆக்டோபர் மாதம் 06 ம் திகதி கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினம் என்பது வெறும் விழாவல்ல; சமூகத்தில் கல்வியின் பங்கு, ஆசிரியரின் அர்ப்பணம், ஆசிரியரின் பொறுப்பு, மாணவரின் கடமை, கூட்டு அர்ப்பணிப்பு போன்ற பலவிடயங்களை நினைவூட்டும் நாளாகும். இதை சமூகத்திற்கே பயனுள்ள நாளாக மாற்றலாம்.
ஆசிரியர்களை மதிப்பது, ஊக்கப்படுத்துவது, அவர்களின் மனநலத்தையும் சமூக உறவுகளையும் வலுப்படுத்துவது போன்றன ஆசிரியர் தினத்தின் சில உள்ளடக்கங்களாகும்.
ஒருவரை மதிப்பதில், நன்றி பாராட்டுவதில் அவரின் மனநிலையை ஊக்கப்படுத்தும் ஒரு மனோவியல் நுட்பம் இருப்பதை புரியலாம்.
ஒருவரை பாராட்டுதல், மதித்தல், ஊக்கப்படுத்துதல் மூலம் அவர் செய்யும் நல்ல நடத்தை அல்லது முயற்சிகளை மீண்டும் செய்ய மனதில் தூண்டுதல் அளித்தல் நிகழ்கிறது.
ஆசிரியர் தினத்தின் மூலம் சமூகத்திற்கு சில முக்கியமான தகவல்களை கொடுப்பதில் ஆசிரியர்களுடன் இணைந்து பாடசாலை சமூகமும் கைகோர்க்கலாம் .
ஆசிரியர் புத்தக அறிவை மட்டுமல்ல, மனித மதிப்புகளையும் சமூக பொறுப்பையும் கற்பிப்பவர் என்ற தகவலை சமூகத்துக்கு கொடுக்கலாம்.
“ஒரு நல்ல ஆசிரியர், நூறு நல்ல குடிமக்களை உருவாக்குவார்” என்ற செய்தியை வலியுறுத்தலாம்.
‘கல்வி’ என்பது வேலைக்காக மட்டுமல்ல, நடத்தை மாற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்கும், நாகரிக வளர்ச்சிக்கும் வழிகாட்டும் அடிப்படை என்ற தகவலை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பல வழிகளில் உணரவைக்கலாம்.
மாணவர்களுக்கு “ஆசிரியர் மீது நன்றியுணர்வை” வளர்ப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டலாம்.
ஆசிரியரின் வழிகாட்டுதலுடன், நல்லது – கெட்டதை பிரித்தறியும் திறனை மாணவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனும் செய்தியை சமூகமயப்படுத்தலாம்.
மாணவர் “பாடம் படிப்பவர்” மட்டுமல்ல; அவர் உணர்ச்சிகள், கனவுகள், சவால்களுடன் கூடிய மனிதர் என்பதை ஆசிரியர்கள் போன்று சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும்.
அதைப் போலவே ஆசிரியர் “கல்வி கொடுப்பவர்” மட்டுமல்ல, சமூகத்தின் பாதை காட்டும் விளக்கு என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இது
வலியுறுத்தி சொல்லப்படவும் வேண்டும்.
நேர்மை, பொறுப்பு, கருணை, மதிப்பு, தன்னம்பிக்கை இவை கல்வியின் அடிப்படை நோக்கம். அதற்கு துணையாக ஒவ்வொரு சமூக உறுப்பினரும், சமூக அமைப்புக்களும் இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லலாம்.
ஆசிரியரின் பணி உயர்ந்த பணி; அந்தப் பணி மதிக்கப்படுவதுடன். மதிப்பதன் அவசியம் உணர்த்தப்படவும் வேண்டும்.
மொத்தத்தில்:
“ஆசிரியர் தினம் என்பது ஆசிரியரை மட்டுமே போற்றும் நாள் அல்ல; கல்வி மூலம் சமூகத்தை மாற்றும் நோக்கம் கொண்ட அனைவரும் ஆசிரியர்களுடன் இணைந்து கல்வியிலும், பண்பாட்டிலும் எம் சமூகம் ஆரோக்கியமான இடத்தை அடைய துணையிருக்கும் நாளாக, குரல் எழுப்பும் நேரமாக, ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சந்தர்ப்பமாக இந்த நாளை மாற்றியமைக்கலாம்.
அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்