மனித நேயமிக்க கிறிஸ்தவ மீன் வியாபாரிக்கு சீனன்கோட்டை முஸ்லிம்கள் வழங்கிய அங்கீகாரம்

பேருவளை – சீனன் கோட்டை பகுதியில் மூன்று தசாப்த்தங்களுக்கு மேலாக அனைத்து இன மக்களினதும் பூரண விசுவாசம்,நம்பிக்கை மற்றும் நாணயத்தோடு மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட கிரிஸ்தவ மதச் சகோதரரான பியந்த்த பெரேரா அவர்கள் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த வெள்ளிக் கிழமை மரணத்தைத் தழுவினார். இவரது திடீர் மரணம் பேருவளை பகுதி அனைத்து இன மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நியாயமான விலையில் சிறந்த (புதிய) மீன்வகைகளை வழங்கி சீனன் கோட்டை மக்களோடு மிகவும் அன்போடு பழகி தமது வியாபாரத்தை செவ்வனே முன்னெடுத்தார்.அவரின் வியாபாரம் பற்றி மக்கள் கறுத்து தெரிவித்த போது மாதத்தில் 30 நாட்களும் இவர் மிகவும் சுறு சுறுப்போடு மீன் வியாபாரம் செய்வார்.ஒரு நாளும் அழுகிய மீன்களைத் தந்ததில்லை. என்பதோடு நியாயமான விலைக்கே தருவார் என்றும் ஏழை மக்கள் வந்தால் அவர்கள் நிலை அறிந்து அவர்களின் பணத்துக்கு மேலதிகமாகவும் கொடுக்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.அவரின் இலப்பு இப் பகுதி மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் தெரிவித்தனர்.சகோதரர் பியந்த்த பெரேரா அவர்களின் குடும்பத்தினருடன் சீனன் கோட்டை பிரமுகர்கள் களந்துரையாடினர்.அதற்கு இனங்க அவரது பூத உடலை மலர் சாலையில் இருந்து முதலாவதாக சீனன் கோட்டையில் உள்ள அவரின் மீன் வியாபார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பெரும்பாலான மக்கள் அலை அலையாய் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.அங்கு அஷ்-ஷேக் மக்கி மன்சூர் (நளீமி) பியந்த்த பெரேராவின் நீதி,நேர்மையான வியாபாரம் பற்றியும் அவரது மனித நேயம் பற்றியும் உரையாற்றினார்.மக்கொனையில் உள்ள அவரது இல்லத்திற்கு சீனன் கோட்டை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கனக்கான மக்கள் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது பூதவுடல் மக்கொனை கத்தோலிக்க மயாணத்தில் அடக்கஞ் செய்யப் பட்டது.மக்கொனை சாந்த மரியா கிரிஸ்தவ தேவாலயத்தில் இறுதி ஆராதனை நடைபெற்ற பின் பூதவுடல் தாங்கிய பேழையை மயானம் வரை எடுத்துச் செல்லும் பொறுப்பை சீனன் கோட்டை மக்களுக்குக் அவரது குடும்பத்தினர் வழங்கினார்கள்.அந்த வகையில் குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அங்கு இறுதி அஞ்சலிக்குச் சென்றிருந்த சீனன் கோட்டை மக்கள் பூதவுடலை கவலையோடு மயானம் வரை ஏந்திச் சென்று குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.சீனன் கோட்டை மக்கள் சார்பில் சமூக சேவையாளர் ஹஸன் ஜெமீல் அனுதாப உரை நிகழ்த்தினார்.சீனன் கோட்டை பள்ளிச் சங்க உறுப்பினர் தஹ்லான் மன்சூர்,மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் அதாவுல்லா அபூபக்கர்,எகடவத்தை தாருல் உளூம் பள்ளிவாசல் நிர்வாகி முஹம்மத் ராஸிக் ஹாஜியார்,சமூக சேவையாளர் மபாஹிம் பாஸி, இரத்தினக்கல் வர்த்தகர்கள் பெருமளவிலான சீனன் கோட்டை மக்கள் இதன் போது சமூகமளித்திருந்தனர்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)


