உள்நாடு

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவுசெய்யப்பட்டார்.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் 2025.08.06ஆம் திகதி அப்பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் இன்றையதினம் (12) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது.

தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வழிமொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புதிய தலைவர், அரசியல் கருத்துவேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செற்பட்ட, சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன், முன்னாள் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியை தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகப் புதிய தலைவர் குறிப்பிட்டார். புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் பிரதியமைச்சர் சுதத் திலகரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, ஜே.சி.அலவத்துவல, ரோஹித்த அபேகுணவர்தன, ஹெக்டர் அப்புஹாமி, சாமர சம்பத் தசநாயக்க, (வைத்தியர்) காவிந்த ஹேஷான் ஜயவர்தன, ஒஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி, (சட்டத்தரணி) துஷாரி ஜயசிங்ஹ, எம். ஏ. எம். தாஹிர், லால் பிரேமநாத், சானக மாதுகொட ஆகியோரும், பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *