உள்நாடுகட்டுரை

மன்னர் அப்துல் அஸீஸ் 45வது சர்வதேச குர்ஆன் மனனப் போட்டி மாபெரும் பரிசளிப்புடன் மக்காவில் நிறைவு

‘இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி
பங்குபற்றியவருக்கு ஆறுதல் பரிசு’

சவுதி அரேபியாவின் மறைந்த மன்னர் அப்துல் அஸீஸின் பெயரில் வருடாவருடம் நடாத்தப்படும் சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டி இம்முறை 45 வது தடவையாவும் புனித மக்காவில் நடாத்தப்பட்டுள்ளது. கடந்த 09 ஆம் திகதி முதல் நடாத்தப்பட்ட இப்போட்டியின் நிறைவில் வெற்றி பெற்றவர்களுக்கு மிகப் பெறுமதியான பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. இதன் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பரிசளிப்பு விழா புனித மக்கா நகரில் கடந்த 20 ஆம் திகதி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தின் நேரடி கண்காணிப்பில் புனித மக்காவின் துணை கவர்னரும் இளவரசருமான ஸஊத் பின் மிஷ்அல் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் மற்றும் இஸ்லாமிய விவகார அழைப்பு மற்றும் வழிகாட்டல்கள் அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக் ஆகியோரின் தலைமையில் இவ்விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இலங்கை உட்பட உலகின் 128 நாடுகளில் இருந்து 179 ஹாபிழ்கள் இப்போட்டியில் பங்குபற்றினர். அவர்கள் அனைவருக்கும் இரு வழி விமான டிக்கட்டுகள், சகல வசதிகளுடனான தங்குமிட மற்றும் உணவு வசதிகள், போக்குவரத்து வசதிகள் அனைத்தும் சவுதி அரேபியாவினால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டன. அத்தோடு இப்போட்டியில் பங்குபற்றியவர்கள் புனித உம்ரா கடமையை மேற்கொள்ளவும் மதீனா மற்றும் சவுதியிலுள்ள புனித ஸ்தலங்களை தரிசிக்கவும் வாய்ப்பளிக்கப்பட்டன.

குறிப்பாக இப்போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு மிகப் பெறுமதியான பணப்பரிசில்களும் வெற்றி பெறாத போட்டியாளர்களுக்கு பெறுமதியான ஆறுதல் பரிசில்களும் கூட வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இப்போட்டியில் வெற்றியீட்டிய ஹாபிழ்களின் அழகிய கிராஅத் ஓதல்களோடு பரிசளிப்பு விழா 20 ஆம் திகதி ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து இப்போட்டியின் நோக்கம், கடந்த 44 தடவைகள் இப்போட்டி நடாத்தப்பட்டமை, இப்போட்டி கடந்து வந்த பாதை, இதன் நிமித்தம் சவுதி ஆட்சியாளர்கள் அளித்துவரும் உதவிகள், ஒத்துழைப்புக்கள் என்பன தொடர்பில் இவவிழாவின் போது தெளிவுபடுத்தப்பட்டன.

குறிப்பாக மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தும் இஸ்லாமிய விவகார அழைப்பு மற்றும் வழிகாட்டல்கள் அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக்கும் சவுதி அரசாங்கமும் அளித்துவரும் உதவி, ஒத்துழைப்புக்கள் மற்றும் சிறப்பான ஏற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக் அவர்கள் விழாவுக்கு வருகை தந்த மக்காவின் துணை கவர்னரும் இளவரசருமான ஸஊத் பின் மிஷ்அல் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத்தையும் போட்டியில் வெற்றியீட்டியவர்களையும் பார்வையாளர்களையும் வரவேற்று உரையாற்றுகையில் ‘சவுதி அரேபியா அதன் அரசியல் யாப்பை அல் குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் அமைத்திருப்பது குர்ஆனுக்கும் ஸூன்னாவுக்கும் சவுதி அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. அத்தோடு உலகிலுள்ள அனைத்து ஹாபிழ்களையும் சவுதி கௌரவிப்பதும் யாவரும் அறிந்த விடயம். அந்த வகையில் தான் புனித மக்காவில் வருடாவருடம் சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டிகளை சவுதி நடாத்துகிறது. இத்தகைய போட்டிகளை உலகின் பல நாடுகளிலும் கூட சவுதி அவ்வப்போது நடாத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.

சவுதி அரேபிய அரசின் ஸ்தாபகர் மன்னர் அப்துல் அஸீஸின் பெயரிலான இப்போட்டி இம்முறை 45வது தடவையாக நடாத்தப்படுகிறது. அன்று தொட்டு இன்று வரை அல் குர்ஆனுக்கும் அதை மனனமிட்டவர்களுக்கும் புனித மக்காவில் பாரிய கௌரவத்தை சவுதி அளித்துவருவதன் வெளிப்பாடே இதுவாகும்.

இப்போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் பெறுமதியான ஆறுதல் பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு வெற்றி பெற்ற 21 அதிஷ்டசாலிகளுக்கு இலங்கை நாணயப்படி 35 கோடி ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்போட்டியில் முதலாமிடத்தை தஷாத் நாட்டைச் சேர்ந்த முஹம்மத் ஆதம் முஹம்மத் தட்டிக் கொண்டார். அவருக்குக் கிடைத்த பரிசு இலங்கை நாணயப்படி நான்கு கோடி ரூபாவாகும். இரண்டாம் இடத்தை சவுதி அரேபியாவைச் சேர்ந்த அனஸ் அல் ஹாஸிமியும் மூன்றாம் இடத்தை நைஜீரியாவைச் சேர்ந்த ஸனூஸி புஹாரி இத்ரீஸ் அவர்களும் பெற்றுக் கொண்டதோடு மீதி 18 பேருக்கும் பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படன.

இவர்களில் வெற்றி பெற்ற 21 வது வெற்றியாளருக்கு இலங்கை நாணயப்படி, 36 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
வெற்றியீட்டிய 21 பேர்களில் சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்தவர்கள் இருவர் மாத்திரம் தான். ஏனைய 19 பேரும் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியா மிக நீதமாக நடக்கிறது என்பதற்கு இது மிகப் பெரிய சான்றாகும்.

இந்நிலையில் சவுதியின் மறைந்த மன்னர் அப்துல் அஸீஸின் பெயரில் வருடா வருடம் புனித மக்கா நகரில் சர்வதேச குர்ஆன் மனனப் போட்டியை நடாத்தி பல கோடி ரூபா பெறுமதியான பரிசில்களை வழங்கிவரும் இரு புனித பள்ளிவாசல்களின் காவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் அப்துல் அஸீஸ் ஆல் ஷைக் ஆகியோர் உலக முஸ்லிம்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கும் சவுதி அரசுக்கும் எல்லா முஸ்லிம்களும் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அந்த வகையில் அல் குர்ஆனுக்கு அளப்பரிய சேவையாற்றிவரும் சவுதி மன்னர், இளவரசர், இஸ்லாமிய விவகார அமைச்சர் ஆகியோருக்கு இலங்கை ஹிக்மா நிறுவனமும் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறது. அத்தோடு இம்முறைப் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து அதிஷ்டசாலிகளுக்கும் மனம் நிறைந்த பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு முதல் மூன்று இடத்தையும் தட்டிக் கொண்ட அதிஷ்டசாலிகளுக்கும் இலங்கை அல் ஹிக்மா சார்பாக மனம் நிறைந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மௌலவி எம்.எச் ஷேஹுத்தீன் மதனி (BA)
பணிப்பாளர்,
அல் ஹிக்மா நிறுவனம்,
கொழும்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *