உள்நாடு

முஸ்லிம் பெண்கள் கலாசார ஆடை அணிவதைத் தடுக்கும் அறிவிப்பை வாபஸ் பெறுங்கள் இம்ரான் மஹ்ரூப் எம்.பீ.வேண்டுகோள்..!

திருகோணமலை மாவட்டத்தில் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் முஸ்லிம் பெண்கள் தங்களது கலாசார ஆடை அணிந்து வரக்கூடாது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வழங்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு வாபஸ்பெறப்பட வேண்டும் என,

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) இடம்பெற்ற சமுர்த்தி (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் தாதியர்கள் மருத்துவ மாதுக்கள் மற்றும் சிற்றூழியர்கள் இனிமேல் கலாசார ஆடை அணிந்து கடமைக்கு வரக்கூடாது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட அலுவலர்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

இவர்கள் கடமை ஏற்றது முதல் தற்போது ஓய்வூதியம் பெறும் வயதையும் அடைந்துள்ள இதுவரையான காலத்தில் சீருடை உடன் கலாசார உடையும் சேர்ந்து அணிந்தே கடமைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

ஆனால் தற்போது கலாசார உடை அணிந்து கடமைக்கு வரக்கூடாது என்றும் இதை மீறும் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களுக்கான பதவி உயர்வுகள் வழங்கப்படமாட்டாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இதுதொடர்பில் அரசாங்கம் கவனத்தில் எடுத்து இந்த பாதிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இனவாதம் இல்லாத ஆட்சி என மேடைக்கு மேடை கூறிக் கொள்ளும் இந்த அரசாங்க காலத்தில் எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் முஸ்லிம் பெண்களின் ஆடை வடிவத்தில் இனவாத போக்கை கையில் எடுத்துள்ள அதிகாரிகளுக்கு எதிராக இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா அல்லது இந்த உத்தரவின் பின்னால் அரசுதான் உள்ளதா என்ற சந்தேகம் உருவாகிறது.

குறித்த பதவிகளுக்குரிய சீருடைக்கு மேலதிகமாக முஸ்லிம் பெண் ஊழியர்கள் தமது கலாசார ஆடைகளை காலாகாலமாக அணிந்து இருக்கிறார்கள்.

இதனை இப்போது அகற்ற சொல்லுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே முஸ்லிம் பெண்களின் கலாசார ஆடை தொடர்பான இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட வேண்டும்.

இனவாதத்தை தற்போது கையில் எடுத்துள்ள அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

அதேவேளை, 2025 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராத சாதாரண தர பரீட்சைக்கான தினத்தை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கு அமைய சாதாரண தர பரீட்சை 2026 பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதியில் தான் ஹிஜ்ரி 1447 ரமலான் மாத நோன்பின் ஆரம்ப தினமாகும்.

அத்தினத்தில் 2025 சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமாவது, ஒரு பன்முக கலாசாரத்தைக் கொண்ட நாட்டில் பன்மைத்துவத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும்.

இதுபோன்று தேசியத்தின் ஒரு பிரதான சமய அனுஷ்டானங்களில் ஒன்றான ரமலானை முன்னிட்டு பரீட்சையை முற்படுத்தவது அல்லது பிற்படுத்துவதே அந்த சமயத்திற்கு கண்ணியளிப்பதாக அமையும்.

இதை விடயமாக கல்வி அமைச்சும் பரீட்சைகள் திணைக்களமும் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூகம் சார்பில் இந்த கோரிக்கையை விடுக்கின்றேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *