பேருவளை நகர சபை தலைவருக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு..!
பேருவளை நகர சபை தலைவர் மபாஸிம் அஸாஹிருக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு ஒன்று சினன்கோட்டை பிட்டவலையில் இடம் பெற்றது.
பிரதேச வாசிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பட்டயப் பொறியியலாளர் எம்.எம்.எம். அம்ஜாத் நகர சபை உறுப்பினர் செய்யித் அஹமட்,தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அரூஸ் அஸாத்,முன்னாள் காதி நீதிபதி மிர்ஸூக் பளீல் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றினர்.
தேசிய மக்கள் சக்தி பேருவளை அமைப்பாளர் ரம்ஸான் சிஹாப்தீன் உட்பட சமூக நல அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள்,வர்த்தகர்கள்,ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பேருவளை நகர சபையை இலங்கையிலேயே சிறந்த நகர சபையாக மாற்றியமைப்பதே எமது பிரதான இலக்காகும் என நகர பிதா மபாஸிம் அஸாஹிர் உரையாற்றும்போது குறிப்பிட்டார். நகர சபை தலைவராக என்னை தெரிவு செய்தமைக்கு நன்றி கூறுகிறேன். மக்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பேன். என்றார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எம்.எம்.அம்ஜாத் பேசும் போது – சாதாரண ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மபாஸிம் அஸாஹிர் நகர பிதாவாக தெரிவாகியதன் மூலம் வரலாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
பேருவளை நகர சபையின் தலைவராக இவர் தெரிவானமை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். பண பலத்தின் மூலம் அரசியல் செய்யும் சுயநலவாதிகளுக்கு தகுந்த பாடம் ஒன்றை இவரது நியமனம் கற்றுக் கொடுத்துள்ளது. தேர்தலின் போது பல அதிகாரத்தை கொண்டு அரசியல் செய்யும் குழுவினருக்கு எதிரான ஆரம்ப முயற்சியே இதுவாகும். தேர்தலின் போது பணம் கொடுத்து வாக்கு வாங்கும் கீழ்த்தரமான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நகர சபை தேர்தலில் போட்டியிட்ட சுயேற்சை குழு பொதுஜன பெரமுனவின் முகவர் என்பது நாமல் ராஜபக்சவின் பேருவளை வருகையோடு நிரூபிக்கப்பட்டுவிட்டது இதை முழு நாட்டு மக்களும் அறிவார்கள்.
புதிய நகர பிதா பேருவளை மக்களுக்கு சிறந்த பணிகளை செய்து புரட்சிகரமான அபிவிருத்தியை மேற்கொள்வார் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
(பேருவளை பீ.எம்.முக்தார்)



