18ஆயிரம் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி கிராம மட்டத்தில் நமது பொருளாதார அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டும்..! -அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை
பதினெட்டாயிரம் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கி கிராம மட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புகளைப் பெறுவதற்கான செயற்பாடுகளை சமூர்த்தி அமைச்சு மேற்கொள்ள வேண்டுமென பாராளுமன்றத்தில் சமூர்த்தி திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் இன்று(20.08.2025) கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.
மேலும் இலங்கையில் சுமார் 18,000 சமூர்த்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்களுள் 1994.04.14, 1995, 1996, 1997 ஆகிய ஆண்டுகள் நியமனம் பெற்றவர்கள் சுமார் 30 வருடகாலமாக கடமையாற்றி எமது நாட்டில் வறுமையை ஒழிப்பதில் முன்னின்று செயற்படும் உத்தியோகத்தர்களாக காணப்படுகின்ற போதிலும் அவர்களுக்கு இதுவரையிலும் எந்தவிதமான பதவி உயர்வுகளும் வழங்கப்படவில்லை. இவர்களுக்கான உரிய பதவி உயர்வுகளை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாடு பூராகவும் காணப்படுகின்ற சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
2008 ஆம் ஆண்டு கிராம உத்தியோகத்தர்களுக்கு அன்று பொது நிருவாக அமைச்சராக கடமையாற்றிய கௌரவ கருஜெயசூர்ய அவர்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து பெறப்பட்ட அனுமதியின் பிரகாரம் நாட்டில் உள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கு MN-2 salary codeற்கு அமைய சம்பளம் மறுசீரமைக்கப்பட்டது. இதற்காக எவ்வித எழுத்துப் பரீட்சையோ அல்லது நேர்முகப் பரிட்சையோ இடம்பெறவில்லை. அந்த வகையில் சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் MN-2 salary codeற்கு அடிப்படையில் சம்பளத்தையும் மறுசீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடகிழக்கில் கடமையாற்றுகின்ற தமிழ் பேசுகின்ற உத்தியோகத்தர்கள் நலன் கருதி சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற சுற்று நிருபங்கள், கடிதங்கள் தமிழ் மொழியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
ஓய்வு பெற்ற/மரணம் அடைந்த உத்தியோகத்தர்களின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்கும் பொருட்டு அதற்குரிய கோவைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களுக்கான நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை காலம் தாழ்த்தாது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
திவினெகும அபிவிருத்தி திணைக்களம் உருவாக்கப்பட்ட பிறகு தற்போது புதிய சேவையில் உள்ள சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆரம்ப சேவைக்குள் உள்வாங்குவதற்கான ஏற்பாடுகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல்களில் ஆளும் கட்சிக்கு சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆதரவு வழங்கியிருந்தனர் என்பதனையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகிறேன் என உரையாற்றியதுடன் சமூர்த்தி உத்தியோத்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி கிராம மட்டத்தில் நமது பொருளாதார அபிவிருத்தி பணிகளில் இவர்களின் ஒத்துழைப்புகளைப் பெறவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
(கே எ ஹமீட்)