கொழும்பு பல்கலை சட்ட பீண மாணவர்களால் பொலிஸ் மா அதிபருக்கு கெளரவம்…!
கொழும்பு பல்கலைக்கழக 92/93 ம் வருட சட்டபீட மாணவர்களின் ஒன்றுகூடலும், பொலிஸ்மா அதிபராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள சட்டத்தரணி பிரியந்த விஜயசூரிய அவர்களுக்கான கௌரவிப்பும் கொரோனையில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.
கொழும்பு பல்கலைக்கழக 92/93 ம் வருட மாணவர்களின் ஒன்றுகூடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் சக சட்டபீட மாணவராக தம்முடன் இருந்து கல்விகற்று இன்று இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ்மா அதிபராக உயர்ந்திருக்கும் சட்டத்தரணி பிரியந்த விஜயசூரிய அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு முக்கிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கொழும்பு பல்கலைக்கழக 92/93 ம் வருடத்தில் சட்டபீடத்தில் பயிற்று உயர்நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றும் கௌரவ ஜிஹான் பலப்பிட்டிய, மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக கடமையாற்றுபவர்கள், சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸ்டர் ஜெனரல், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், உள்நாட்டலுவல்கள், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர், மாவட்ட நீதிமன்ற நீதிபதி, கூட்டுத்தாபன தலைவர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட ஜனாதிபதி சட்டத்தரணிகள் கூட இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த விஜயசூரிய, நான் களுத்துறை தொடங்காத பிரதேசத்தை சேர்ந்தவன். எனது பெற்றோர்கள் கல்வியறிவு கூடியவர்கள் அல்ல. பிரீத் நூலை வாசிக்கும் அளவுக்கு அவர்களுக்கு கல்வியறிவு இருந்தது. ஆரம்பத்தில் எனது கிராமத்தில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு சென்றேன். அந்த காலத்தில் நான் சுட்டித்தனமான சிறுவன். எனது பாடசாலை காலத்தில் என்னை விட மூத்த மாணவர்களுடன் சண்டை பிடித்து எனது கையில் காயம் வந்தது. அதை எனது அம்மா சாப்பிடும் போது கண்டு விட்டார். அதன் பின்னர் என்னுடன் சண்டைபிடித்த மாணவரை ஏசி சண்டைபிடிக்க எனது தாய் செல்லவில்லை. மாறாக எனக்கே அடித்தார்.
ஏன் இதை சொல்கிறேன் என்றால் அன்று எனது அம்மா எனக்கு வழங்கிய முன்மாதிரி சரியாக இருந்ததால் தான் நான் இங்கு இப்போது இந்நிலையில் இருக்கிறேன். நான் சாதாரண தரம் கற்றுக்கொண்டிருந்த போது எனது மூத்த சகோதரர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த சூழ்நிலையில் மரணமடைந்தார்.
இதனால் குடும்ப கஷ்ட சூழ்நிலையால் நான் இலங்கை பொலிஸில் சேவையில் 1988 இல் இணைந்தேன். நான் கொழும்பில் கலகம் அடக்கும் பொலிஸ் பிரிவில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த வந்த போது தான் நான் இந்த சட்டபீடத்தில் கல்விகற்று சட்டத்தரணியாக வந்திருக்க வேண்டும். குடும்ப நிலையால் அது நடைபெறவில்லை என்று கவலையடைந்தேன். அது பின்நாட்களில் வைராக்கியமாக என்னுள் மாறி 1989 இல் உயர்தர பரீட்சைக்கு தோற்றியபோது மொரட்டுவ பல்கலைக்கழக கட்டிடநிர்மாணத்துறைக்கு நான் தெரிவு செய்யப்பட்டேன்.
அதனை நிராகரித்து 1990 இல் உயர்தர பரீட்சைக்கு தோற்றியபோது எனக்கு சட்டபீடம் கிடைத்து. அப்போதுதான் நான் உங்களுடன் ஐக்கியமானேன். சட்டபீடத்தில் நான் கல்விகற்றுக்கொண்டிருந்த காலத்தில் நான் உங்கள்களுக்கு தெரியாமல் பொலிஸிலும் கடமையாற்றினேன். அந்த காலகட்டத்தில் எனக்கு பாடக்குறிப்புக்களை தந்துதவிய நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அப்போது அம்பாறை சங்கமன்கண்டியில் பொலிஸ் விசேட அதிரடி படையில் சேவையாற்ற நேரிட்டது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுக்கு அந்த பிரதேசத்தில் உள்ள சவால்கள் பற்றி நன்றாக தெரியும்.
இவ்வாறான பல இன்னல்களை கடந்து எனது பட்டத்தை பெற்ற பின்னர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பரீட்சையிலும் சித்தியடைந்து உதவி பொலிஸ் அத்தியட்சகராகவும் தெரிவு செய்யப்பட்டேன். இவ்வாறான பல சவால்களையெல்லாம் கடந்து தான் நான் படிப்படியாக உயர்ந்து இன்று பொலிஸ்மா அதிபர் எனும் இந்த நிலைக்கு முன்னேறியுள்ளேன் என்றார். சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க செயலாளர் அன்வர் சியாத் கிழக்கு மாகாணத்திற்கு நல்லண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கிழக்கின் நிலைமைகள் ஆராய வருகைதருமாறு பொலிஸ்மா அதிபருக்கு முன்வைத்த அழைப்பை ஏற்று விரைவில் விஜயம் செய்யவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.
(நூருல் ஹுதா உமர்)

