உள்நாடு

ஊடகத்துறை மிகப் பலம் வாய்ந்தது; இன்று அது உலகை ஆள்கிறது..! -பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவிப்பு

“ஊடகத்துறை மிகப் பலம் வாய்ந்தது. இன்று அது உலகை ஆள்கிறது. நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கு எனக்குப் பக்க பலமாக பல ஊடகங்கள் இருந்தன” என, தேசிய ஒருமைப்பாட்டுப் பிரதியமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முளப்பர் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், பலகத்துறை கலை இலக்கிய வட்டம் ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்திருந்த மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான விஷேட ஒன்று கூடல் மற்றும் கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான ஒருநாள் ஊடக செயலமர்வு, கடந்த (17) ஞாயிற்றுக்கிழமை கம்மல்துறை ‘அல்- பலாஹ்’ கல்லூரியில் நடைபெற்றது.
செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் என்.எம். அமீன் மற்றும் பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஜே.எம். தாஜுதீன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், பிரதியமைச்சர் மேலும் கூறியதாவது,
“சமூகப் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து, அவற்றுக்குத் தீர்வு பெற்றுக் கொடுப்பதில் ஊடகவியலாளர்கள் சிறந்த பங்காற்றுகின்றனர்.
ஊடகவியலாளர்கள் எப்போதும் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, நடு நிலைமை பேண வேண்டும். உண்மையின் பக்கமே நிற்க வேண்டும்.
முன்னர் ஊடகவியலாளர்கள் தனிக்குழுவாக இயங்கினார்கள். ஆனால், இன்று கையில் போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் ஊடகவியலாளர்களாக மாறிவிட்டனர். தமிழ் மக்களை உணர்ச்சி வசப்படுத்த அவர்கள் மொழிப் பிரச்சினையை முன் வைக்கின்றனர். முஸ்லிம் மக்களை உணர்ச்சி வசப்படுத்த அவர்கள் மதப் பிரச்சினையை முன்வைக்கின்றனர்.
எப்போதும் குப்பைகளைக் கிளறி, அவற்றைச் சமூக வலைத்தளங்களில் பரப்பும் இவர்களைப் பற்றி நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இன்று முஸ்லிம்கள் மத்தியில் பேசுபொருளாக பலஸ்தீனமும் அருகம்பையும் மாறியுள்ளது.
எமது நாட்டில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அனைவருக்கும் உள்ள பொறுப்பும் கடமையுமாகும். அதற்காக நாம் அனைவரும் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
மாணவர்கள் மத்தியில் ஊடகத்துறை தொடர்பான விழிப்பூட்டல் மற்றும் பயிற்சிகளை வழங்கி வரும்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பணி மிகவும் பாராட்டத்தக்கது.
கம்மல்துறை ‘அல் பலாஹ்’ கல்லூரியில் மாணவர்கள் எதிர்நோக்கும் வகுப்பறை மற்றும் இடப்பற்றாக்குறைப் பிரச்சினையை நீக்க தற்போது முன்னெடுக்கப்படும் காணிக் கொள்வனவுத் திட்டத்திற்கு முஸ்லிம் சமூகத்தின் தனவந்தர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி உதவ முன்வர வேண்டும்.
இப்பாடசாலையின் இடப்பற்றாக்குறையை நீக்குவதற்கு புதிய காணியொன்று வாங்குவது அவசியம். அதில் ஒன்றல்ல பல கட்டடங்கள் கட்டப்பட வேண்டும்.
ஒரு பாடசாலைக்கு காணியொன்று இருந்தால், அதில் தேவையான கட்டடங்கள் அமைத்துத் தருவோமென, அரச சார்பற்ற சர்வதேச நிறுவனம் ஒன்று என்னிடம் வாக்களித்துள்ளது.
எனவே, புதிய காணியை வெகு சீக்கிரமாகக் கொள்வனவு செய்வதன் மூலம், இக்கல்லூரியின் இடப்பற்றாக்குறைப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.
இக்கல்லூரிக்கு அருகில் உள்ள காணியொன்றை, அதன் உரிமையாளர் வர்த்தக நோக்கமின்றி சமூக நோக்கில் இக்கல்லூரிக்கு விற்பனை செய்ய இணக்கம் தெரிவித்துள்ளார்.
அவரை நான் பாராட்டுகிறேன். அவருக்காக துஆச் செய்கிறேன்” என்றார்.
நிகழ்வில், அரசாங்க தகவல் திணைக்கள அதிகாரி எஸ்.ஏ.எம். பவாஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் செய்திப் பிரிவு ஆசிரியர் பஸ்ஹான் நவாஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் ஷர்ப்டீன், “விடிவெள்ளி” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பயிற்சித் திட்டங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜாவிட் முனவ்வர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
ஊடக செயலமர்வு மற்றும் உறுப்பினர்களின் ஒன்று கூடலுக்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை, மீடியா போரத்தின் உப தலைவர்களில் ஒருவரான கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் மற்றும் போரத்தின் தேசிய அமைப்பாளர் இர்ஷாட் ஏ. காதர் ஆகியோர் மேற்கொண்டனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *