உள்நாடு

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி பாடசாலைக்கு நிதியுதவி வழங்கிய “EWARDS 87” அமைப்பு..!

புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்காக “EWARDS 87” அமைப்பு நன்கொடை வழங்கிவைத்தது.

பாடசாலை அதிபர் எஸ்.எம் ஹுஸைமத்திடம் குறித்த நன்கொடைப் பணம் செவ்வாய்க்கிழமை (19) கையளிக்கப்பட்டது.

இந்த வருட ஆரம்பத்தில் புத்தளம் நாகவில்லு எருக்கலம்பிட்டியில் ஏற்பட்ட கடும் வெள்ள அனர்தத்தினால் முழுக்கிராமமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை வளாகமும் பெரிதும் பாதிக்கப்பட்டு பாடசாலை சுற்று மதிலின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்து அதன் புனர் நிர்மாணப் பணிக்காக “EWARDS 87” அமைப்பினால் மேற்படி நிதியுதவி வழங்கப்பட்டது

பாடசாலையின் விளையாட்டு மைதான பக்கமுள்ள சுமார் 280 அடி நீளமுள்ள சுவர்களை கட்டுவதற்கான மதிப்பீடு தொழிநுட்ப உத்தியோகத்தரினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த 280 அடி நீளமுள்ள சுவர்களை கட்டுவதற்காக சுமார் 35 லட்சம் செலவாகும் என தொழிநுட்ப உத்தியோகத்தரினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த கட்டுமானப்பணியை ஆரம்பிப்பதற்கான அனுமதியையும் புத்தளம் வலயக்கல்வி பணிமனை வழங்கியுள்ளது.

அந்த வகையில் குறித்த சுவரின் கட்டுமானப் பணிக்கு முதன் முதலாக”EWARDS 87″ அமைப்பினால் சுமார் 82000/- ரூபாய் பணம் பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் EWARDS 87 அமைப்பின் தலைவர் சியாத், பொருளாளர் நிஸ்பான் மற்றும் கழக உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் குறித்த கட்டுமானப் பணிக்கு ஊரின் தனவந்தர்கள், கழகங்கள், அமைப்புக்கள் என அனைத்து தரப்பினரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு பாடசாலை அதிபர் எஸ்.எம் ஹுஸைமத் கேட்டுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *