கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உறுப்பினர்களுக்கான ஒன்று கூடல்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், பலகத்துறை கலை இலக்கிய வட்டம் ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, மீடியா போரத்தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களுக்கான விசேட ஒன்று கூடல் மற்றும் கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலை மாணவ மாணவிகள், பாடசாலை ஊடகக் கழகங்களுக்கான ஒருநாள் செயலமர்வு, இன்று (17) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை, நீர்கொழும்பு – போருதொட்ட அல் – பலாஹ் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்ஹாஜ் என்.எம். அமீன், பலகத்துறை கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் எம்.ஜே.எம். தாஜுத்தீன் ஆகியோரின் இணைத் தலைமையில் நிகழ்வுகள், இருவேறு அமர்வுகளாக இடம்பெறுகின்றன.
மாலை நடைபெறவுள்ள சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில், தேசிய ஒருமைப்பாட்டுப் பிரதியமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முளப்பர் பிரதம அதிதியாகவும், நீர்கொழும்பு மாநகர முதல்வர் ரொபட் ஹீன்கெந்த கௌரவ அதிதியாகவும், மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் சிறப்பு அதிதிகளாகவும் பங்கேற்கவுள்ளதாக, மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் என்.ஏ.எம். ஸாதிக் ஷிஹான் தெரிவித்தார்.
பாடசாலை மாணவ மாணவிகள் மத்தியில் ஊடகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நவீன உபகரணங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல், பாடசாலைகளில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை பிரதான ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தல் அல்லது அறிக்கையிடல், என்பன தொடர்பான வழிகாட்டல் பயிற்சிகளும் இதன்போது வழங்கப்படவுள்ளன.
“விடிவெள்ளி” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ப்பிரிவு செய்தி ஆசிரியர் பஸ்ஹான் நவாஸ், முஸ்லிம் மீடியா போரத்தின் பயிற்சித் திட்டங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜாவிட் முனவ்வர், ஊடக பயிற்றுவிப்பாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளருமான இஸ்பஹான் ஷர்ப்டீன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஊடக செயலமர்வு மற்றும் உறுப்பினர்களின் ஒன்று கூடலுக்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை, போரத்தின் உப தலைவர்களில் ஒருவரான ‘கலாபூஷணம்’ எம்.ஏ.எம். நிலாம், போரத்தின் தேசிய அமைப்பாளர் இர்ஷாட் ஏ. காதர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
( ஐ. ஏ. காதிர் கான் )