மரணமடையும் மீனவர்களுக்காக நஷ்டஈடாக 10 இலட்சம் ரூபாய் மீன்பிடி அமைச்சினால் வழங்கப்படும்..!
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் கேள்விக்கு மீன்பிடி அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றில் தெரிவிப்பு
பாராளுமன்றம் நேற்று (07.08.2025) கௌரவ சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை மீன்பிடி அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரிடம் வாய்மூல கேள்விகளாக பின்வருவனவற்றை முன்வைத்தார்
- 2024.07.12 ஆம் திகதி அட்டாளைச்சேனை கப்பலடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கப் புறப்பட்டுச் சென்ற, சின்ன பாலமுனைப் பிரதேசத்தில் வசிக்கும் ஈ.எல். இர்பான் என்ற மீனவர் தமிழகக் கடற்கரைக்கு அடித்துச் செல்லப்பட்டிருந்ததுடன் 130 நாட்களுக்குப் பிறகு 2024.11.20 ஆம் திகதி அவர் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அழைத்து வரப்பட்டார் என்பதனையும் இச்சம்பவத்தின் போது, அட்டாளைச்சேனை 06 ஆம் பிரிவில் வசித்துவந்த கே.எஸ். நிஷ்பார் என்ற மீனவர் மரணமடைந்தார் என்பதனையும்;
மீன்பிடி அமைச்சர் அறிவாரா?
மரணமடைந்த கே.எஸ். நிஷ்பார் என்ற மீனவருக்கு கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் நட்டஈடு செலுத்தப்பட்டுள்ளதா?
என்பதனையும் ஈ.எல். இர்பான் என்ற மீனவருக்கும் அவரது சேதமடைந்த படகுக்கும் இழப்பீடு செலுத்தப்பட்டுள்ளதா? என்பதையும் ஆமெனில், மேலே குறிப்பிடப்பட்ட மீனவர்களுக்கு செலுத்தப்பட்ட இழப்பீட்டுக்குத் தொகைகள் வெவ்வேறாக எவ்வளவு எனபதையும் மீன்பிடி அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா? என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கேள்விகள் எழுப்பினார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த மீன்பிடி அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அட்டாளைச்சேனை 06 ம் பிரிவு கப்பலடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்று மரணம் அடைந்த கே.எஸ். நிஷ்பார் என்ற மீனவருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான விண்ணப்பப்படிவங்கள் அவரின் குடும்பத்தினருக்கு மீன்பிடி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாகவும், நஷ்டஈடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களின் மீனவர் படகுகளை விடுவித்து இலங்கைக்கு எடுத்து வந்து மீனவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் பதிலளித்தார்
2 ஆவது வாய்மூல கேள்வியினை பாராளுமன்ற உறுப்பினர் கேட்கையில்,
- கடலில் காணாமல் போன மீனவர்கள் தமிழ்நாட்டில் கரையொதுங்கிய போது நானும், எங்களது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களும் மீன்பிடி அமைச்சரிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தோம். நமது நாட்டு மீனவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட மீன்பிடி அமைச்சர், மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் அதேவேளை, மரணமடைந்த மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக மீன்பிடி பிரதி அமைச்சர் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது அவரும் மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என தெரிவித்தார். மரணம் அடையும் மீனவர்களுக்கு எவ்வளவு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்பதனையும் நமது நாட்டு மீனவர்கள் தமிழ்நாட்டில் (நாகப்பட்டினத்தில்) கரையொதுங்கி பல மாதங்கள் கஷ்டப்பட்டனர். இவர்களுக்கும் மீன்பிடி அமைச்சினால் நஷ்டஈடு எவ்வளவு வழங்கப்படும் என்பதனையும் இப்பாராளுமன்றத்திற்கு மீன்பிடி அமைச்சர் தெரிவிப்பாரா? எனவும் மீன்பிடி அமைச்சரின் மாவட்டமான பருத்தித்துறை மீனவர் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நான்கு மீனவர்களும் தமிழ்நாட்டில் கரையொதுங்கினர். இம்மீனர்களுக்கும் எவ்வளவு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது என்பதனையும் இப்பாராளுமன்றத்திற்கு மீன்பிடி அமைச்சர் தெரிவிப்பாரா?
எனக் கேள்விகளை எழுப்பினார்
பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் 2 ஆவது கேள்விக்கு பதிலளித்த மீன்பிடி அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்,
இதுவரையும் மரணித்த மீனவர்களுக்கு 02 இலட்சம் ரூபாய் மீன்பிடி அமைச்சினால் வழங்கப்பட்டு வந்தன தற்போது மரணிக்கின்ற மீனவர்களுக்கு 10 இலட்சமாக வழங்குவதற்கு தீர்மானம் எடுத்துள்ளோம். தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் படகுகளை விடுவித்து இலங்கை மீனவர்களிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மீன்பிடி அமைச்சு மேற்கொண்டு வருவதுடன் சேதமடைந்த படகுகள், மோட்டார் படகுகளுக்கான நஷ்டஈட்டையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் மீன்பிடி அமைச்சர் தெரிவித்தார்
(கே எ ஹமீட்)
