இங்கிலாந்து பிரீமியர் லீக் மகுடத்தை தனதாக்கியது லிவர்பூல்
ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, ஆன்ஃபீல்டில் மைதானத்தில் லிவர்பூல் அணி இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
லீக்கில் இன்னும் நான்கு போட்டிகள் மீதமுள்ள நிலையில் லிவர்பூலின் வெற்றி உறுதியாககியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற டோட்டன்ஹாமுக்கு எதிரான போட்டியை சமன் செய்தாலே லிவர்பூல் அணி சம்பியன் ஆவதற்கு அது போதுமானதாக இருந்தது.
இருப்பினும், லிவர்பூல் 5-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிகாரப்பூர்வமாக சம்பியன்களாக முடிசூட்டியது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் அணி டொமினிக் சோலங்கே மூலம் முதல் கோலைப் பதிவு செய்தது.
ஆனால் 16வது நிமிடத்தில், லூயிஸ் டயஸ் கோல் அடித்து லிவர்பூல் அணியை சமன் செய்தார். 24வது நிமிடத்தில் மிட்ஃபீல்டர் மேக் அலிஸ்டரின் அழகான கோல் மூலம் லிவர்பூல் முன்னிலை பெற்றது.
முதல் பாதி ஆட்டம் 3-1 என முடிந்தது, 34வது நிமிடத்தில் டச்சு வீரர் காக்போவும் கோல் அடித்தார். 63வது நிமிடத்தில் முகமது சாலா அடித்த கோலால் லிவர்பூல் அணி முன்னிலையை மூன்றாக அதிகரித்தது.
69வது நிமிடத்தில் டோட்டன்ஹாம் அடித்த சொந்த கோல், அந்த அணியின் கோல் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தியது.
முப்பது வருட இடைவெளிக்குப் பிறகு 2020 ஆம் ஆண்டில் லிவர்பூல் பிரீமியர் லீக் பட்டத்தை மீண்டும் வென்றபோது, ஆன்ஃபீல்ட் மைதானம் காலியாக இருந்தது.
கோவிட் கட்டுப்பாடுகள் அன்று ரசிகர்களை ஒதுக்கி வைத்தன. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, உள்ளூர் அணியின் ஆட்டத்தைக் காண ஆயிரக்கணக்கானோர் ஆன்ஃபீல்டில் குவிந்தனர்.
இதன் மூலம், லிவர்பூல் மான்செஸ்டர் யுனைடெட்டின் 20 இங்கிலீஷ் லீக் பட்டங்களின் சாதனையையும் சமன் செய்தது.