அரபு மொழியை மேம்படுத்தி பரவலாக்குவதில்அளப்பரிய பங்களிப்பு நல்கும் சவுதி அரேபியா..!
(வருடாவருடம் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி சர்வதேச அரபு மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. அத்தினத்தின் நிமித்தம் இக்கட்டுரை பிரசுரமாகிறது)
இலங்கையிலும் 51 வது ஆண்டு சர்வதேச அரபு மொழி தினத்தின் விஷேட வைபவம்
அரபு மொழியை மேம்படுத்த சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸினால் சர்வதேச அகடமி ஒன்று சவுதி அரேபியாவில் இயக்கப்படுகிறது.
சர்வதேச அரபு மொழி தினத்தின் 51 வது ஆண்டு தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. என்றாலும் இத்தினத்தை சவுதி அரேபியா வெகுவிமர்சையாகக் கொண்டாடுகிறது. அந்த வகையில் இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹதானியின் ஏற்பாட்டில் விஷேட வைபவமொன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சவுதி அரேபிய மன்னரும் இரு புனித பள்ளி வாசல்களின் பாதுகாவலருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் மற்றும் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆகியோரின் விஷேட ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையில் இலங்கையிலும் சர்வதேச அரபு மொழி தின வைபவம் சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானியின் ஏற்பாட்டில் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நாட்டின் வரலாற்றில் சர்வதேச அரபு மொழி தின வைபவமொன்று நடாத்தப்படுவது சவுதி அரேபியா தூதரகத்தினாலாகும். இது தொடர்ந்தும் இரண்டாவது தடவையாக நடாத்தப்படுகிறது. இதற்கான பெருமை சவுதி அரேபியாவையும் அதன் தூதவர் காலித் ஹமூத் அல் கஹ்தானியையும் சாரும்.
இலங்கை சவுதி அரேபியாவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாகும். அதனால் சவுதி வெகுவிமர்சையாக கொண்டாடும் சர்வதேச அரபு மொழி தினத்தின் விஷேட வைபவமொன்றை இந்நாட்டிலும் ஏற்பாடு செய்து நடாத்துவதற்கான ஒழுங்குகளை தூதுவர் காலித் ஹமூத் அல் கஹதானி மேற்கொண்டுள்ளார்.
அதேபோன்று குர்ஆன் மனனப் போட்டிகளை வருடாவருடம் உலகளாவிய மட்டத்திலும் பிராந்திய மற்றும் நட்பு நாடுகள் மட்டத்திலும் நடாத்தி பெறுமதி மிக்க பரிசில்களை சவுதி அரேபியா வழங்கி வருகின்றது. அந்த வகையில் இலங்கையிலும் தேசிய மட்ட குர்ஆன் மனனப் போட்டியொன்று கடந்த ஜுலை மாதத்தில் தூதுவர் காலித் ஹமூத் கஹ்தானியின் ஏற்பாட்டில் முதற்தடவையாக நடாத்தப்பட்டமை தெரிந்ததே. அதே போன்று இலங்கையில் இரண்டாவது தடவையாகவும் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் குர்ஆன் மனனப் போட்டியொன்று நடாத்தப்பட இருக்கிறது.
இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சர்வதேச அரபு மொழி தின வைபவத்தில் அமைச்சர்கள், முஸ்லிம், முஸ்லிம் அல்லாத நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள், புத்திஜீவிகள், உலமாக்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், நிறுவனத் தலைவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த சர்வதேச அரபு மொழி தின வைபவத்தையொட்டி அரபு மொழியின் முக்கியத்துவத்தை இலங்கை மக்களுக்கு எடுத்தியம்பும் வகையில் தூதுவர் விஷேட உரையை நிகழ்த்த உள்ளதோடு அரபு எழுத்தணி கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமான அல் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மொழி அரபாகும். அல்லாஹ் பேசுகின்ற மொழியும் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசிய மொழியும் பல நபிமார்களும் பேசிய மொழியும் அரபு தான். அல் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மொழியும் இறைத்தூதர் புனித மக்கா மதீனா இரண்டிலும் புனித தீனுல் இஸ்லாத்தைப் போதித்த மொழியும் அரபி மொழியில் என்பதால் இப்புனித அல்குர்ஆன் மற்றும் நபிமொழிக் கிரந்தங்கள் அனைத்தும் அரபி மொழியில் நூல் வடிவத்தில் தொகுக்கப்பட்டு மறுமை நாள் வரையும் பாதுகாக்கப்படுகிறது. மறுமையில் அல்லாஹ் தன் அடியார்களுடன் அவனது உயர்ந்த தகுதிக்கேற்ப தான் விரும்பிய மொழியில் பேசுபவனாக இருந்தாலும் அரபு மொழியில் தன் அடியார்களுடன் பேசுவான் என்ற கருத்துக்களும் இருக்கிறது. ஐவேளை தொழுகைக்காக சொல்லப்படும் அதான் (பாங்கு) உட்பட முஸ்லிம்கள் தினமும் தொழுகின்ற ஐவேளைத் தொழுகையும், ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும் பொழுது இன்முகத்துடன் கைலாகு கொடுத்து ஸலாம் சொல்லுவதும் இன்னும் பல வணக்க வழிபாடுகளும் அரபியில் தான் அமைய வேண்டும். அப்போது தான் அவர்களது வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படும்.
அந்த வகையில் அரபு மொழி என்பது இம்மையிலும் மறுமையிலும் மிக முக்கியத்துவம் பெற்று விளங்கும் மொழியாக உள்ளது.
புனித மக்கா, மதீனா உட்பட சவுதி அரேபியாவிலும் ஏனைய நாடுகளிலும் குறிப்பாக பல அரபு நாடுகளிலும் இம்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உலகின் பல நாடுகளிலும் அரபு மொழியைக் கற்றுக்கொடுக்கவென கருத்தரங்குகளையும் செயலமர்வுகளையும் நடாத்திவரும் சவுதி, அரபு மொழி கற்கை நிலையங்களையும் அமைத்துள்ளது. குறிப்பாக அரபு மொழிக்கான மன்னர் சல்மான் சர்வதேச அகடமி சவுதி அரேபியாவில் ஸ்தாபித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவுதி அரேபிய மந்திரி சபையின் ஏகோபித்த முடிவின்படி, பிராந்திய மற்றும் உலகளவில் அரபு மொழியின் பங்கை மேம்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த அகடமி ரியாத் நகரைத் தலைமையகமாகக் கொண்டுள்ளது.
அரபு மொழிக்கான மன்னர் சல்மான் சர்வதேச அகடமி, சவுதி அரேபியாவில் செயல்படுத்தப்படும் சிறந்த கலாசார முயற்சிகளுக்குள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கலாசாரம் தேசிய மற்றும் சர்வதேச அளவில் அதன் தாக்கத்தைச் செலுத்துவதற்காக மன்னர் சல்மானினால் ஆரம்பிக்கப்பட்டது. உலகளவில் அரபு மொழிக்கான பங்களிப்பை மேம்படுத்துவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
இதேவேளை இலங்கை உட்பட உலகின் பல நாடுகளையும் சேர்ந்த மாணவர்கள் சவுதி அரேபியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்ளவென சவுதி அரேபியா வருடா வருடம் புலமைப்பரிசில் வழங்கி வருகின்றது. அவ்வாறு புலமைப்பரிசில் பெற்று சவுதி அரேபிய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்கள் தங்கள் கற்கைக்கு மேலதிகமாக அரபு மொழியைச் சரளமாக பேசவும் எழுதவும் வசதியளிக்கும் வகையில் முற்றிலும் இலவசமாக இரண்டு வருட காலம் அரபு மொழி கற்பிக்கப்படுவதோடு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதன் நிமித்தம் சவுதி அரேபியாவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அரபு மொழி பீடம் விஷேடமாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் சவுதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்பின் நிமித்தம் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு அங்குள்ள இஸ்லாமிய கலாசார மற்றும் வழிகாட்டல்கள் நிலையங்களில் அரபு மொழி கற்பிக்கப்படுவதோடு இஸ்லாமிய வழிகாட்டல்களும் வழங்கப்படுகின்றன.
அல் குர்ஆன் அரபு மொழியில் இருப்பதால் இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் அனைத்து முஸ்லிம் சிறுவர்களும் சிறுவயதிலிருந்தே அரபு மொழியில் அல் குர்ஆனை நன்கு சரளமாக ஓதப் பழகப்படுத்தப்படுகின்றனர். அதன் ஊடாக அல் குர்ஆனை உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் சரளமாக ஓதக்கூடியவர்களாகவும் மனனமிட்ட ஹாபிழ்களாகவும் உள்ளனர். இது மாபெரும் அருளாகும். அத்தோடு இலங்கையிலுள்ள அரபிக் கல்லூரிகளிலும் அரபி மொழி கற்பிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கமும் பாடசாலைக் கல்வித்திட்டத்தின் கீழ் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தர வகுப்புக்களுக்கும் பல்கலைக்கழக கற்கைகக்கும் அரபு மொழி ஒரு முக்கிய பாடமாக அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழிகளில் அரபு மொழி நான்காவது இடத்தில் உள்ளது, அரேபிய நாடுகள் உட்பட சுமார் 66 நாடுகளில் இம்மொழி பேசப்படுகிறது. அதனால் 1974 இல் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மொழியாக அரபு விளங்குகிறது.
இவ்வாறான பின்புலத்தில் அரபு மொழியைக் பாதுகாப்பதற்கு சவுதி அரேபியா அதி முக்கியத்துவம் அளித்திருக்கிறது. அதன் அரசியலமைப்பின் முதல் ஷரத்தாக அதனை உள்ளடக்கியுள்ளதோடு அரபை உத்தியோகபூர்வ மொழியாகவும் பிரகடனப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஒரு தடவை, ‘எமது நாடு சவுதி அரேபியா. அது ஒரு உண்மையான அரபு நாடு. அரபு மொழியை அதன் அனைத்து துறைகளுக்கும் அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது. இதற்காக பல கல்லூரிகள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் சவுதி அரேபியாவுக்குள்ளேயும் வெளியேயும் நிறுவப்பட்டுள்ளன. அரபு மொழியைக் கற்றல், கற்பித்தல் ஆகியவற்றை சவுதி அரேபியா என்றும் ஆதரித்து ஊக்குவிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரபு நாடுகள் அடங்கலாக ஏனைய நாடுகளிலும் அரபு மொழியின் செயற்றிறனை மேம்படுத்தும் நோக்கில் மறைந்த மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ், அரபு மொழி சேவைக்கான சர்வதேச மையமொன்றையும் ஸ்தாபித்துள்ளார். மாநாடுகள், கருத்தரங்குகள் மூலம் அரபு மொழிக்கு சேவையாற்றுவதும் அதைக் கற்பிக்கவென புலமையாளர்களை பல நாடுகளுக்கும் அனுப்பி வைப்பதும், அதற்கான ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்குவதும் இதன் பிரதான நோக்கங்களாகும்.
எனவே அரபு மொழியை வளர்க்கவும் அரபு மொழியிலான அல் குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா தொடர்பான அறிவை பரவலாக்கி மேம்படுத்தவும் சவுதி அரேபியா முன்னெடுக்கின்ற சகல முயற்சிகளும் வேலைத்திட்டங்களும் என்றும் மெச்சிப் பாராட்டத்தக்கவை. அந்த வகையில் சர்வதேச அரபு மொழி தினத்தின் விஷேட வைபவம் இரண்டாவது தடவையாக இந்நாட்டிலும் நடாத்த ஏற்பாடு செய்த மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மற்றும் இலங்கைக்கான தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி ஆகியோருக்கு இந்நாட்டின் சார்பிலும் மக்கள் சார்பிலும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் இலங்கை அல் ஹிக்மா நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது.
அஷ்ஷைக் எம்.எச். ஷைஹுத்தீன் மதனி
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்,
கொழும்பு