உள்நாடு

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

இபலோகம பொலிஸ் பகுதிக்குட்பட்ட மஹாஇலுப்பல்லம் உதேனிபுர கிராமத்தில் நேற்று (11) மாலை காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற சாரதியும் ஒரு பிள்ளையின் தந்தையுமான மஹாஇலுப்பல்லம் உதேனிபுர பகுதியை வசிப்பிடமாக கொண்ட துவான் சமி மொகமட் சதுர்தீன் என்ற (62) வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று  (11) மாலை மஹாஇலுப்பல்லம் நகரில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தேக்கு மரங்கள் நிறைந்த சாலை வழியாக அவர் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது 06.10 மணியளவில் யானை தாக்கியுள்ளது.

காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த சதுர்தீன் பிரதேசவாசிகளின் உதவியுடன் எப்பாவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காட்டு யானையின் தாக்குதலினால் ஏற்பட்ட கடுமையான உள் காயங்களினால் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.

மஹாஇலுப்பல்லம் பிரதேசம் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள  நிலையில் அதற்கு தீர்வாக 10 காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த யானை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *