159 ஆசனங்களும் 2/3 பெரும்பான்மையும்..! (கட்டுரை -சிராஜ் மஷ்ஹூர்)
தேசிய மக்கள் சக்திக்கு, மக்கள் சக்தி மிக்க நாடாளுமன்றம் ஒன்றை வழங்கியுள்ளனர்.
1977 தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 5/6 பெரும்பான்மையைப் பெற்றது. அப்போதிருந்தது தொகுதிவாரி தேர்தல் முறையாகும்.
1983 இற்குப் பின்னர் விகிதாசார தேர்தல் முறை ( PR) மூலமே நாட்டில் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முறையின் கீழ் தனியொரு கட்சி 2/3 பெரும்பான்மையைப் பெறுவது மிகக் கடினமான விடயம்.
ஆனால், மக்கள் அந்தப் பெரும்பான்மையை தேசிய மக்கள் சக்தி அரசாங்த்திற்கு வாக்களித்துள்ளனர். இது மக்களின் அபரிமிதமான நம்பிக்கையை வெளிக்காட்டுகிறது.
இந்த மிகையான நம்பிக்கை, அரசாங்கத்துக்கு முன்னே உள்ள சவாலாகும். கடந்த காலங்களில் 2/3 பெரும்பான்மையை துஷ்பிரயோகம் செய்தோரே அதிகம்.
தேசிய மக்கள் அரசாங்கம் அவ்வாறு தவறாக நடக்க மாட்டாது என்பதே மக்களது எதிர்பார்ப்பாகும். ஜனாதிபதி தோழர் அனுர குமார திசாநாயக்கவும் அவ்வாறான துஷ்பிரயோகம் இடம்பெறாது. 2/3 பெரும்பான்மையைத் தந்த மக்களது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையைப் பாதுகாப்போம் என்று உறுதியளித்திருக்கிறார்.
இந்த 2/3 மூலம் நல்ல பல மாற்றங்கள் இடம்பெற வேண்டும். மக்கள் சார்பான புதிய அரசியலமைப்பு உருவாக வேண்டும். நட்டின் இனப் பிரச்சினைக்கு தொலைநோக்கிலான தீர்வு வேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும். மிகப் பொருத்தமான தேர்தல் முறையொன்று உருவாக்கப்பட வேண்டும். கல்வி, பொருளாதார விடயங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதுபோன்ற ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை அர்த்தபூர்வமாக மாற்றும் 2/3 பெரும்பான்மையாக அமையும் என்ற நம்பிக்கையே இன்று நாடு தழுவிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மக்கள் ஜனாதிபதி மீது அதீதமான நம்பிக்கையை வைத்திருக்கின்றனர். அதைப் பேணிப் பாதுகாப்பதே இப்போதுள்ள சவாலும் கடப்பாடும் ஆகும். நல்லது நடக்கப் பிரார்த்திப்போம்; முயற்சி செய்வோம்.
தவறுகளைச் சுட்டிக்காட்டி சீர்திருத்துவோம். ஆக்கபூர்வமான விமர்சனங்கள், வழிப்படுத்தல்கள், ஆலோசனைகள் மூலம் பங்கேற்பு ஜனநாயகத்தின் (Participatory Democracy) கனதியை- அர்த்தத்தைக் கூட்டுவோம்.
ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துகள்.
(சிராஜ் மஷ்ஹூர்)