சீனன்கோட்டை ஸன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் 50 வருட பூர்த்தியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் திகதி மின்னொளியில் கண்காட்சி உதைப்பந்தாட்ட போட்டி
இலங்கை தீவில் புகழ்பெற்ற ஓர் விளையாட்டு கழகமாக திகழும் பேருவளை சீனன்கோட்டை ஸன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் 50 வது பூர்த்தி விழாவை முன்னிட்டு, எதிர்வரும் 10ஆம் திகதி (2024-11-10) ஞாயிற்றுக்கிழமை மாலை 6:15 மணிக்கு மின்னொளியில் சினேகபூர்வ கண்காட்சி உதைப்பந்தாட்ட போட்டியொன்று நளீம் ஹாஜியார் நடைபெறவுள்ளது.
சீனன்கோட்டை ஸன்ரைஸ் விளையாட்டு கழகமும், இலங்கையின் முன்னணி விளையாட்டு கழகமுமான கொழும்பு ஸவுன்டஸ் விளையாட்டு கழகமும் இக் கண்காட்சி உதைப்பந்தாட்ட போட்டியில் மோதவுள்ளன.
50வது வருட பூர்த்தி விழாவுக்கு கழகத்தலைவர் அல்-ஹாஜ் யாகூத் நளீம் தலைமை வகிப்பார். ஜேர்மன் மேய்ன் கிங்ஸிக் பிரேஸ் மாநில முன்னாள் மாவட்ட அமைச்சர் கர்ல் எயர் கவுபர், அவரின் பாரியார் மரியொம் எயர் கவுபர், இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவர் ஜெஸ்வர் உமர், களுத்துறை உதைப்பந்தாட்ட சங்கத்தலைவர் டாக்டர். வனின் பெர்ணான்டோ ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்வர்.
நிகழ்வில் ஜேர்மன் நாட்டின் பிரமுகர்கள், ஊர் பிரமுகர்கள், ஸன்ரைஸ் விளையாட்டு கழக உறுப்பினர்கள், கழகத்தின் ஆரம்ப கால உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்வர் என கழகத்தின் உப தலைவர் அல்-ஹாஜ் அன்ஸார் ஜுனைத், செயலாளர் அல்-ஹாஜ் ரிஸான் ஹாஷிம் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த விழாவை முன்னிட்டு நளீம் ஹாஜியார் விளையாட்டு மைதானம் பல இலட்சம் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவினை முன்னிட்டு நளீம் ஹாஜியார் விளையாட்டு மைதானம் விழாக் கோலம் பூண்டுள்ளது. தேசிய கொடிகள், ஸன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் கொடிகள், வாழ்த்து பெனர்கள் மற்றும் மின்னொளி கொண்டு மைதானம் அலங்கரிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நளீம் ஹாஜியார் விளையாட்டு அரங்கு பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீட ஸ்தாபகரும், நாடறிந்த கொடை வள்ளலுமான மர்ஹும் எம்.ஐ.எம் நளீம் ஹாஜியாரினால் தனது சொந்த நிதியில் நிர்மாணிக்கப்பட்டு 1970 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 07 ஆம் திகதி அப்போதைய பிரதம மந்திரி கெளரவ டட்லி சேனநாயக்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மர்ஹும் நளீம் ஹாஜியார் இப்பிரதேச விளையாட்டு வீரர்களின் நலன்கருதி பல கோடி ரூபா பெறுமதியான தனது சொந்தக் காணியை விளையாட்டு அரங்கு அமைப்பதற்கு அன்பளிப்புச் செய்தார்.
மர்ஹும் நளீம் ஹாஜியாரின் இந்த உயர் சேவையினால் சீனன்கோட்டையில் இருந்து தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டிகளில் சீனன்கோட்டை வீரர்கள் பங்குபற்றி பேருவளை மண்ணிற்கு புகழ் சேர்த்துள்ளனர்.
அதேபோல், எமது வீரர்கள் பாடசாலை உதைப்பந்தாட்ட அணியில் இணைந்து வலைய, மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றி பெற்று பாடசாலைக்கும் புகழ் சேர்த்துள்ளனர்.
1970 ஆம் ஆண்டு வரை சீனன்கோட்டையில் எவ்வித மைதான வசதிகளும் இல்லாத சந்தர்ப்பத்தில் நளீம் ஹாஜியார் முன்வந்து சீனன்கோட்டையைச் சேர்ந்த மர்ஹும்களான முஹம்மத் பரீத், ஸனூன் ஹாஜியார், ரவுப் ஹாஜியார், யஹ்யா ஹாஜியார் உட்பட மற்றும் பல பிரமுகர்களின் ஆலோசனைப்படி நளீம் ஹாஜியார் இந்த மைதானத்தை அமைத்து கொடுத்ததாக ஊடகவியலாளர் சந்திப்பதில் கழக உபதலைவர் அன்ஸார் ஜுனைத் தெரிவித்தார்.
இந்த விளையாட்டு கழகம் மூலம் சிறந்த முன்னணி உதைப்பந்தாட்ட வீரர்கள் சீனன்கோட்டையிலிருந்து உருவானதாகவும் இதனை அமைத்த மர்ஹும் நளீம் ஹாஜியார் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறினார்.
கழகச் செயலாளர் அல்-ஹாஜ் ரிஸான் ஹாஷிம் கூறியதாவது, 1974 ஆம் ஆண்டு மர்ஹும் இம்ரான் ஹாஜியார் உட்பட பிரமுகர்களின் தலைமையில் ஸன்ரைஸ் விளையாட்டு கழகம் உருவாக்கப்பட்டதோடு, ஆயிரக்கணக்கான உதைப்பந்தாட்ட வீரர்களை இந்த கழகம் உருவாக்கியுள்ளது.
ஸன்ரைஸ் விளையாட்டு கழகம் களுத்துறை உதைப்பந்தாட்ட சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, மேற்படி சங்கம் நடாத்தும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் மற்றும் அகில இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் எப்.ஏ கிண்ணம் உட்பட பல சுற்றுப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்று சாதனைகளையும் நிலைநாட்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
சீனன்கோட்டை பகுதிக்கு உதைப்பந்தாட்ட மைதானமொன்றை பெற்றுக் கொடுத்த நளீம் ஹாஜியாரை நாம் என்றும் மறக்க முடியாது. அவர் கல்வி, ஆன்மீகக் கல்வி மற்றும் பொதுச் சேவைகளோடு இப்பகுதி விளையாட்டுத் துறையை முன்னேற்றவும் செய்த சேவைகள் மகத்தானதாகும்.
ஸன்ரைஸ் விளையாட்டு கழகத்தில் இதற்கு முன்னர் பல பயிற்சியாளர்கள் சிறந்த முறையில் பயிற்சிகளை வழங்கினார்கள். அவர்களை நன்றியுணர்வோடு ஞாபகப்படுத்துகிறோம். ஸன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் தற்போதைய பயிற்சியாளராக ரஹ்மான் கடமை புரிகிறார்.
எமது கழகத்தின் முன்னேற்றத்திற்காக ஐந்து தசாப்தங்களாக பங்களிப்புச் செய்த அனைவரையும் நாம் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம் என்றும் ரிஸான் ஹாஷிம் மேலும் தெரிவித்தார்.
(பேருவளை பீ.எம் முக்தார்)