சிங்கள மக்களின் வாக்குகளால் முனீர் முலப்பரை பாராளுமன்றம் அனுப்புவோம்
கஹட்டோவிட்ட கூட்டத்தில் வேட்பாளர் ருவன் மாபலகே முழக்கம்.
இன நல்லுறவுக்குப் பாலமாக விளங்கி தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு நாடு முழுவதும் பங்களிப்புச் செய்த சகோதரர் முனீர் முலப்பரை சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றியீட்டச் செய்து பாராளுமன்றம் அனுப்புவோம் கம்பஹா மாவட்ட வேட்பாளர் ருவன் மாபலகே உறுதி படத் தெரிவித்தார்.
கஹட்டோவிட்டவில் நேற்றிரவு இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பெரும்பாலான மக்கள் பங்கேற்றிருந்த இக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் முனீர் முலப்பர் ஒரு பட்டதாரி, சிறந்த பேச்சாளர், சிங்கள மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.
எனவே சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றாக இணைந்து அவரது வெற்றியை உறுதி செய்வோம். சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் அனுர சகோதரரை ஜனாதிபதியாக்கினோம்.எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பலமான அரசாங்கமொன்றினை அமைத்து இந்த நாட்டை முன்னேற்றி சகல மக்களும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழக் கூடிய தேசமொன்றினை கட்டியெழுப்புவோம் என்றும் அதற்கு அனைத்து மக்களும் பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டுமென்றும் அறைகூவல் விடுத்தார்.