கற்பிட்டி திகழி முஸ்லிம் மகா வித்யாலய சித்திர பாட ஆசிரியரை தாக்க முற்பட்ட இளைஞர் கைது..!
கற்பிட்டி திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் சித்திரப் பாட ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட இளைஞர் கற்பிட்டி பொலிஸாரினால் வியாழக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் சித்திரப் பாட ஆசிரியர் ஒருவர் மீது திகழியைச் சேர்ந்த இளைஞர் கடந்த 2024.10.10 ம் திகதி தாக்குதல் மேற்கொள்ள முயன்றுள்ளார். இதில் தலையிட்ட அதிபர் உட்பட ஏனைய சில ஆசிரியர்களுக்கும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மிக மோசமாக குறித்த இளைஞர் நடந்து கொண்டுள்ளார்.
இதற்கு எதிராகவும் ஆசிரியர்களின் பணிக்கு பாதுகாப்பு வேண்டியும் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறையிட்ட போதும் ஊர் மக்களாலும் பொலிசாரினாலும் கடந்த 2024/10/16 வரை இளைஞர் கைது செய்யப்படாமலும் எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் புதன்கிழமை (16) திகழி பாடசாலையின் ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பாடசாலை அதிபர், பாடசாலை அபிவிருத்திக் குழு என்பன கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இது விடயமாக துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்ததை அடுத்து பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை சந்தித்து குறித்த இளைஞரை தாம் கைது செய்து அவருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து ஆசிரியர்கள் நிப்பந்தனையுடன் தங்களது பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பொலிசார் ஆசிரியர்களுக்கு வழங்கிய உறுதிமொழியின் பிரகாரம் குறித்த இளைஞன் இன்று (17) தனது வீட்டில் வைத்து கற்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் , புத்தளம் எம்.யூ.எம் சனூன்)