ஐக்கிய ஜனநாயக குரலில் பயணிப்பதன் மூலமே புத்தளத்திற்கு நல்லதொரு எதிர்காலம் கிடைக்கும் – புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஜெஸீல்
ஐக்கிய ஜனநாயக குரலில் பயணிப்பதன் மூலமே புத்தளத்திற்கு நல்லதொரு எதிர்காலம் கிடைக்கும் என ஐக்கிய ஜனநாய குரல் கட்சியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஏ.ஆர்.எம்.ஜெஸீல் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் ஊடாக இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், வேட்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜெஸீல் புளிச்சாக்குளத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தக் கலந்துரையாடலின் போது மிக நீண்ட காலமாக பெரும்பான்மைக் கட்சி ஊடாக அரசியல் பயணத்தை தொடர்ந்த வேட்பாளர் ஏ.ஆர்.எம்.ஜெசீல், ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் ஊடாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளமைக்கான காரணங்களை தெளிவுபடுத்தினார்.
அத்துடன், கட்சியின் கொள்கைகளையும், எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது விளக்கப்படுத்தினார்.
மிக நீண்ட காலமாக பெரும்பான்மைக் கட்சிகளுக்கு வாக்குகளை வழங்கியுள்ள தமது ஆதரவாளர்களுக்கு திருப்திகரமான பணிகளை செய்ய முடியாத ஒரு சூழ்நிலை காணப்பட்டதாகவும், ஆனால், ஐக்கிய ஜனநாயக கட்சி அதற்கான களத்தை அமைத்துக் கொடுத்திருப்பதாகவும் அவர் இக் கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டினார்.
இன, மத பேதங்கள் எதுவுமின்றி, மக்களின் அபிலாஷைகளையும், நமது இளைஞர், யுவதிகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் நல்லதொரு சந்தர்ப்பம் தற்போது கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
எனவே, புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் எமது கட்சிக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும், இந்தத் தேர்தலில் இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கான வியூகங்களை வகுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, வரும் பொதுத் தேர்தலில் புத்தளம் மக்களும் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் எமது மக்களின் தேவைகளை மிகவும் கௌரவமாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வேட்பாளர் ஏ.ஆர்.எம்.ஜெசீல் இந்தக் கலந்துரையாடலின் போது மேலும் தெரிவித்தார்.
(ரஸீன் ரஸ்மின்)