எம்மை ஆளுகிறவர்கள் தகுதியானவர்களாக, ஊழல்வாதிகளாக இல்லாமல் மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுபவர்களாக இருக்க வேண்டும்..! -எஸ்.எம். சபீஸ்
எம்மை ஆளுகிறவர்கள் தகுதியானவர்களாக ஊழல்வாதிகளாக இல்லாமல் மக்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுபவர்களாக இருக்க வேண்டும். அதனால்தான் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்காவை வெற்றிபெற செய்துள்ளார்கள். தொடர்ச்சியாக கல்வி மற்றும் பொருளாதார மாற்றத்திற்கும் அதன் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுத்து வரும் நான் ஏழை மக்களின் உயர்தர வாழ்விற்காக அர்பணிப்புடன் செயற்பட்டு வருகிறேன். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்.
மருதமுனையில் இடம்பெற்ற கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக கைகோர்த்த அரச ஊழியர்களுக்கும் அவருக்குமிடையிலான சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
கல்வி திட்ட மாற்றத்திற்காகவும் தேசிய நலனில் அக்கறை கொண்டவராகவும், பள்ளிவாசல் தலைமை ஊடாக வாலிபர்களை வழிப்படுத்தியவராகவும் தொழில் புரட்சி ஏற்படுத்தவும் அதன்மூலம் மக்களின் உயர்தர வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணிப்பவராகவும் என்னை நீங்கள் கடந்த 5 வருடமாக உன்னிப்பாக அவதானித்து வந்துள்ளீர்கள்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிக்காக நீங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டது போன்று இந்த பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து எமது மக்களின் பிரதிநிதித்துவத்திற்காகவும் எனது வெற்றிக்காகவும் பாடுபட முன்வந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
(மாளிகைக்காடு செய்தியாளர்)