உலகளாவிய ரீதியில் மத நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதிலும் தீவிரவாதத்தை ஒழிப்பதிலும் குர்ஆன் போட்டிகளை நடாத்துவதிலும் சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சர் ஆல் ஷைக்கின் முன்னோடிப் பாத்திரங்கள்; சகவாழ்வு மாநாடுகளையும் குர்ஆன் போட்டிகளையும், ஏழு நாடுகளில் ஏழு நாட்களில் நடாத்திய சவுதி
தீவிரவாதம் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கியெறிந்து சகிப்புத்தன்மை சகவாழ்வை உலகில் நிலைநாட்டும் மிகச் சிறந்த நாடாக சவுதி அரேபியா திகழுகிறது. அதேநேரம் உள்நாட்டிலும் வௌிநாடுகளிலும் அல் குர்ஆனின் பெருமையையும் மகத்துவத்தையும் பரவலாக்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கும் நாடாகவும் விளங்குகிறது சவுதி அரேபியா.
இதன் நிமித்தம் அல் குர்ஆன் மனனப் போட்டி உள்ளிட்ட அல் குர்ஆனுடன் தொடர்புடைய பலவிதமான நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்து நடாத்தக்ககூடிய நாடாகவும் சவுதி விளங்குகிறது.
இரண்டு புனித பள்ளிவாசல்களின் காவலரும் சவுதி அரேபிய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் மற்றும் பட்டத்து இளவரசருமான முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் இப்பணிகள் சவுதியின் இஸ்லாமிய விவகார அமைச்சு மற்றும் அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் ஆல் ஷைக்கினால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
அமைச்சர் ஆல் ஷைக் இவ்வமைச்சு பதவியை ஏற்றது முதல் இன்று வரை மிகச் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஏழு நாட்களுக்குள் தீவிரவாதம் பயங்கரவாதத்திற்கெதிரான மாநாடுகளையும் அல் குர்ஆன் போட்டிகளையும் உலகின் ஏழு நாடுகளில் நடாத்தி சர்வதேசத்தின் கவனத்தை சவுதியின் பக்கம் ஈர்த்துள்ளார்.
குறிப்பாக இந்தோனேசியா, கிர்கிஸ்தான் குடியரசு, செனகல், சாம்பியா, கமரூன், ஜிபூட்டி, கொமொரோஸ் குடியரசு ஆகிய நாடுகளில் தீவிரவாத பயங்கரவாத ஒழிப்பு மாநாடுகளும் அல் குர்அன் போட்டிகளும் சவுதியின் பூரண அனுசரணையுடன் நடாத்தப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களின் இமாம்களையும் இஸ்லாமிய பிரசாரகர்களையும் இலக்கு வைத்து இம்மாநாடு நடாத்தப்பட்டன. அல் குர்ஆனை மமனம் செய்த பெண் ஹாபிழாக்களுக்கென முதலாவதும் மிகப் பெரியதுமான குர்ஆன் போட்டி கிர்கிஸ்தானில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இம்மாநாடு வெற்றிபெறவும் சிறப்பாக நடாத்தப்படவும் அமைச்சர் கலாநிதி அப்துல் லத்தீஃப் பின் அப்துல்அஸீஸ் ஆல் ஷைக் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கினார். இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் அளப்பரிய சேவை செய்துவரும் சவுதிக்கு உலக மட்டத்தில் நற்பெயரைப் பெற்றுக் கொடுப்பதில் உச்சபட்ச சிரத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவராக உள்ளார். இம் மாநாடுகள் அனைவராலும் பாராட்டப்படக்கூடியனவாக உள்ளன.
ஏனைய முஸ்லிம் நாடுகளும் சவுதியைப் பின்பற்றினால் உலகில் தீவிரவாதம் பயங்கரவாதத்தை ஒழித்துக்பட்டி, சகிப்புத்தன்மை, சகவாழ்வை நிலைநாட்ட முடியும். அத்தோடு அல் குர்ஆன் வழிகாட்டல்களையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளையும் உலகிற்கு எடுத்தியம்பக்கூடியதாகவும் இருக்கும். தீவிரவாதம் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கியெறிந்து சகிப்புத்தன்மை சகவாழ்வை உலகில் நிலைநாட்ட வந்த மார்க்கம் இஸ்லாம்.
சவுதி அரேபியா தீவிரவாதத்தை ஒழித்ததோடல்லாமல் சகிப்புத்தன்மை சகவாழ்வை உலகில் நிலைநிறுத்தவும் அர்ப்பணிப்போடு உழைத்து வருகிறது. அதில் வெற்றியும் கண்டுள்ளது.
குறிப்பாக அமைச்சர் ஆல் ஷைக், தீவிரவாதம் பயங்கரவாதத்திற்கெதிராக முழுதாகச் செயற்பட்டு, சகிப்புத்தன்மை சகவாழ்வை உலகில் நிலைநாட்ட அரும் பாடுபட்டமைக்காக எகிப்து நாட்டின் அதி உயர்ந்த விருது அவருக்கு வழங்கி கௌரவிப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் மத நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதிலும் குர்ஆன் போட்டிகளை ஏற்பாடு செய்து நடாத்துவதிலும் இவர் அர்ப்பணிப்போடு செயற்பட்டு வருகிறார்.
மேலும், தீவிரவாதம் பயங்கரவாதத்திற்கெதிரான சர்வதேச மாநாடுகளும் சர்வதேச அல் குர்ஆன் போட்டிகளும் சவுதி மன்னர் மற்றும் இளவரசரின் நேரடி கண்காணிப்பில் சவுதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி அப்துல் லதீப் ஆல் ஷைக்கின் மிகச் சிறந்த ஏற்பாடுகளுடன் புனித மக்காவில் வருடாவருடம் நடாத்தப்படுகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய மாநாடுகளை உலகின் பல நாடுகளிலும் அடிக்கடி நடாத்தி வரும் சவுதி அரேபிய மன்னருக்கும் இளவரசருக்கும் முழு மூச்சாகச் செயல்படும் இஸ்லாமிய விவகார அமைச்சருக்கும் அமைச்சு ஊழியர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய பிரார்த்திப்போம்.
மௌலவி எம்.எச்.ஷேஹுத்தீன் மதனி
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம், கொழும்பு