வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை நாமே மீட்டெடுத்தோம்.கொஸ்கம கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க
பேராசை காரணமாக சஜித்தும், அநுரவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்
- சஜித்தும் அநுரவும் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதுவுமே செய்யவில்லை
- இந்த நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை நாம் மீட்டெடுத்தோம்
- கஷ்டப்பட்டு கட்டமைக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைய இடமளிக்காதீர்!
– சீதாவக்க கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு
வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை தானும் தனது குழுவினரும் மீட்டெடுத்ததாகவும், சஜித்தும் அநுரவும் இந்நாட்டு மக்களுக்கு ஆறுதல் கூற ஒரு விரலைக் கூட அசைக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அன்று மக்கள் படும் துன்பங்களைக் கண்டுகொள்ளாத சஜித்தும் அநுரவும் இன்று பேராசையின் காரணமாகவே மக்கள் முன் வந்து நிற்கின்றனர் என தெரிவித்த ஜனாதிபதி, கஷ்டப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க இடமளிக்க வேண்டாம் எனவும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று (09) பிற்பகல் கொஸ்கமவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
”நாட்டின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் நாட்டு மக்களுக்கு வாழும் உரிமையை வழங்கவும் தான் இந்த நாட்டின் ஜனாதிபதியின் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அன்று மக்கள் உணவு, மருந்து, எரிபொருள் இல்லாமல், உணவு சமைக்க எரிவாயு இல்லாமல் கஷ்டப்பட்டனர். மேலும், தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலைவாய்ப்பு வருமான வழிகளும் இல்லாமல் போனது. இந்த நிலை எனக்கு வேதனையாக இருந்தது. எனவே நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.
சஜித் பிரேமதாசவோ அல்லது அனுரகுமார திஸாநாயக்கவோ உங்கள் பசியை போக்க தயாராக இருக்கவில்லை. மக்களுக்கு எரிபொருளையும் எரிவாயுவையும் வழங்கி வாழும் உரிமையை வழங்க அவர்கள் தயாராக இல்லை. இந்நாட்டு மக்கள் துன்பப்பட்டபோது, அதை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மக்களுக்கு நிவாரணம் கொடுக்க விரலைக் கூட அசைக்கவில்லை.
ஆனால் மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு வழங்கி, பாடசாலைகளை திறந்து, மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து, நாட்டின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தேன். அதன்படி நானும், என்னுடன் இருந்த பிரதமரும், அமைச்சர்களும், எம்.பிகளும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தோம்.
சஜித்தும் அநுராவும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் மக்கள் தொடர்பில் எமக்கு வேதனை இருந்தது. அந்த வலியின் காரணமாகவே மக்களுக்கு நிவாரணம் வழங்க பாடுபட்டோம். சஜித்தும், அநுரவும் இந்நாட்டு மக்கள் படும் துன்பத்தைப் பார்க்கவில்லையா, மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாதிருப்பதை காணவில்லையா? அதற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை. ராஜபக்சவைப் பாதுகாக்கவே நான் வந்ததாக கூறினார்கள். நான் ராஜபக்சக்களைப் பாதுகாத்திருந்தால் அவர்களும் இன்று இந்த மேடையில் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வேறு மேடையில் இருக்கிறார்கள்.
அன்று மக்கள் படும் துன்பத்தைக் கண்டும் உதவிக்கு வராதவர்கள் இன்று மக்கள் முன் வருவதற்கு ஜனாதிபதி பதவி மீதான பேராசை தான் காரணம்.
நாட்டின் பொருளாதாரம் இன்னும் முழுமையாக வலுப்பெறவில்லை. நாட்டின் பொருளாதாரத்தைக் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு கொண்டு வந்தோம். எனவே, கஷ்டப்பட்டு கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்தை யாரும் அழிக்க அனுமதிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். செப்டம்பர் 22ஆம் திகதி, அனைவரும் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை வலுவாக முன்னெடுப்போம்” என்று தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன
”எமது நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான நெருக்கடியின் போது, ஆட்சியாளர்கள் இல்லாமல் எமது நாடு அராஜகமாக இருந்த போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சவால்களை ஏற்று நாட்டை அராஜகத்திலிருந்து விடுவிப்பதற்காக பாடுபட்டார்.
இந்நாட்டு மக்கள் எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கினார். தேர்தலை நடத்துவதற்கான நடைமுறை உருவாக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்கால சந்ததியினரை புதிய உலகிற்கும் புதிய பொருளாதாரத்திற்கான பயணத்திற்கும் கொண்டு செல்லும் பயணத்தை ஆரம்பித்தார். அந்த வேலைத் திட்டம் தொடர வேண்டும். இல்லை என்றால் இந்த நாடு மீண்டும் அழிந்துவிடும்.
அரசியல் சித்தாந்தங்களை விட்டுவிட்டு, அனைத்து மக்களும் தாயகத்தைப் பாதுகாத்து, அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள பயணம் வெற்றியடைய இந்த நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரின் ஆதரவையும் அவருக்கு வழங்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன:
”இன்று முழு நாட்டினதும் ஒரே சின்னம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிச் சின்னமான ‘கேஸ் சிலிண்டர்’ மாத்திரமே. இந்த தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் 10 நாட்கள் போன்ற சிறு காலமே உள்ளது. செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியில் பங்குகொள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாவக்க மக்கள் தயாராக உள்ளனர்.
அதற்கு சாதி, மத வேறுபாடின்றி இந்தத் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வது அவசியம். நாடளாவிய ரீதியில் பல்வேறு மாகாணங்களுக்கு பயணிக்கும் மக்களுக்கு இத்தேர்தலின் சூடுபிடிக்கும் தொகுதியாக அவிசாவளையை மாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்றார்.
அவிசாவளை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் அமல் புஸ்ஸெல்லகே,
”இந்த நாட்டை யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்ற நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எமது நாட்டைப் பொறுப்பேற்று வரிசையில் நிற்கும் யுகத்திலிருந்து எம்மைக் காப்பாற்றினார். இன்று நம் நாட்டு மக்கள் சகஜமாக வாழத் தேவையான சூழலை தயார் செய்துள்ளார். நமது விவசாயத்தையும், பிள்ளைகளின் கல்வியையும், நாட்டின் இளைஞர் சமுதாயத்தினர் தொழில்களை பாதுகாக்கக் கூடிய சூழலை இந்த நாட்டில் உருவாக்கினார். அதையெல்லாம் வைத்து நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது.
கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு நாட்டை இவ்வளவு விரைவாக உலகம் ஏற்றுக்கொள்ளச் செய்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இப்படி திறமைவாய்ந்த வேறொரு தலைவர் உலகில் இல்லை. அதனால்தான் அவிசாவளை பிரதேசத்தின் அனைத்து அரசியல் தலைவர்களும் இன்று அவரது வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்” என்றார்.
அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் மகேஷ் அல்மேதா, சீதாவக்க பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜயந்த ரோஹண, ஜனாதிபதித் தேர்தல் கூட்டு செயற்பாட்டுக் குழுவின் கொஸ்கம பிராந்திய அழைப்பாளர் சமந்த உதயகுமார கமகே,அவிசாவளை கூட்டு செயற்பாட்டுக் குழுவின் பொருளாளர் விமல் பிரசன்ன மற்றும் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.