விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் சம்பியன் மகுடம் சூடினார் இத்தாலியின் ஜானிக் சின்னர்

உலகின் முதல் நிலை டெனிஸ் வீரரான ஜானிக் சின்னர், டெய்லர் ஃபிரிட்ஸை 6:3, 6:4, 7:5 என்ற நேர் செட்களில் தோற்கடித்து அமெரிக்க ஓபன் பட்டத்தை தனதாக்கினார்.

உலகின் புகழ்பெற்ற அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த இரு வாரங்களாக இடம்பெற்று வந்தது. அதற்கமைய அதில் ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர், மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என நாக்கு பிரிவுகளாக இடம்பெற்றிருந்தது.

இதில் ஆடவர் ஒற்றையரின் இறுதிப் போட்டியில் இத்தாலியின் நட்சத்திர வீரரான முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர், டெய்லர் ஃபிரிட்ஸை எதிர்த்து இறுதிப் போட்டியில் பங்கேற்றார். நியோர்க்கில் ஆர்தர் ஆஷ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் முதல் செட்டை 6:3 என கைப்பற்றி முன்னிலைபெற்றார்ஜானிக் சின்னர்.

பின்னர் இடம்பெற்ற 2ஆவது செட்டிலும் தனது அசத்தலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜானிக் சின்னர் 6:4 என தனதாக்கினார். பின்னர் தொடர்ந்த 3ஆவது செட்டை மிகுந்த போராட்டத்தின் பின்னர் 7:5 என கைப்பற்றிய இத்தாலியின் ஜானிக் சின்னர் நேர் செட்களில் வெற்றி பெற்று அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் சம்பியன் பட்டத்தை தனதாக்கி அசத்தனார்.

இத்தாலியின் 23 வயதான ஜானிக் சின்னர் இந்த ஆண்டு வெற்றியீட்டிய இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். கடந்த ஜனவரி மாதம் நடந்த அவுஸ்திரேலிய ஓபனில் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *