சமூக ஊடகங்களில் பொய்ப்பிரசாரங்களும் வெறுப்பூட்டும் பிரசாரங்களும் அதிகரிப்பு ; கஃபே அமைப்பு தெரிவிப்பு
2024 ஜனாதிபதித் தேர்தலின் போது, சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப் பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக, சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே அமைப்பின் கண்காணிப்புக்களின் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன், “2019 ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது” என, கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (05) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “தேர்தலுக்கு முந்திய காலப்பகுதிகளில், சமூக ஊடகங்கள் தொடர்பில் கஃபே அமைப்பின் கண்காணிப்பாளர்கள் மேற்கொண்ட கண்காணிப்புக்களின்படி, 5 வேட்பாளர்களை இலக்கு வைத்து வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்கள், பொய்யான செய்திகள் மற்றும் தவறான தகவல்கள் பகிரப்படுவது தெரிய வந்துள்ளது.
இது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்குத் தடையாக இருப்பதாகவும், அதேபோன்று அமைதியான தேர்தலுக்குத் தடையாக இருக்கிறது” என்றும், கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மனாஸ் மக்கீன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, “இவ்வாறு, சமூக ஊடகங்களின் மூலம் பொய்யான மற்றும் வெறுப்பூட்டக் கூடிய பிரசாரங்களால், வன்முறை அதிகரிக்ககூடிய வாய்ப்புக்கள் உருவாகலாம்” எனவும், அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், ‘வாட்ஸப்’ குழுமங்களிலும், ‘பேஸ்புக்’ குழுமங்களிலும் இதுபோன்று பொய்ப் பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்டுகின்ற பிரசாரங்கள் தொடர்பில் பாதகமான வீடியோப் பதிவுகள் பகிரப்பட்டு வருவதாகவும்,, அதேபோன்று ஒரே குழுவில் பல்வேறு அரசியல் கருத்துக்களை முன் வைப்பவர்கள் உள்ளதால், இவ்வாறானவர்கள் தங்களுக்கு எதிரான கருத்துக்களை முன் வைப்பதாகவும், இவை வன்முறையாக மாறக் கூடும்” எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான மனாஸ் மக்கீன், “சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் இதுபோன்ற பதிவுகள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்வதைத் தவிர்க்குமாறும்” மேலும் அந்த அறிக்கையில் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )