வெப்ப நிலை குறித்து கடும் அவதானம் தேவை..! -காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தல்.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (06) மேலும் உயர்ந்து “கடும் அவதானம்” செலுத்தப்பட வேண்டிய நிலைக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் இவ்வாறு வெப்பநிலை உயர் மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பமானது அதிக அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
போதுமான அளவு நீர் அருந்துதல், நிழலான பகுதிகளில் முடிந்த அளவு ஓய்வெடுத்தல், கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் மெரில் மெண்டீஸ் தெரிவித்தார்.
இதற்கிடையில், அதிக சூரிய ஒளி காரணமாக தலைவலி, வாந்தி, உடல்வலி, தூக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் கடும் வெப்பமான இந்த நாட்களில் பரீட்சை நிலையங்களுக்கு தயாராக வருமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.
குறிப்பாக, முடிந்த அளவு தண்ணீர் அருந்துமாறும், பரீட்சை நிலையங்களில் தங்களுடைய இடத்தில் கடுமையான வெயில் படும் இடம் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.