விளையாட்டு

ஐசிசி இன் முதல் நிலை வீராங்கனையாக சமரி அத்தபத்து

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மகளிர் ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசைப் பட்டியலில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவியும் இடதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனையுமான சமரி அத்தபத்து 773 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒவ்வொரு சர்வதேச போட்டித் தொடர்களும் நிறைவுக்கு வந்தவுடன் புதிய வீரஇ வீராங்கனைகளுக்கான தரப்படுத்தலை வெளியிட்டுவருவது வழக்கம். அதற்கமைய இலங்கை மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நிறைவு பெற்றிருக்க அத் தொடர் 1:1 என சமநிலை பெற்றிருந்தது. இத் தொடரின் முதல் போட்டி மழையால் கழுவப்பட 2ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றிருந்தது.

பின்னர் இடம்பெற்ற தீர்மானமிக்க 3ஆவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணியின் தலைவியான சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்த 195 ஓட்டங்களின் உதவியால் இலங்கை மகளிர் அணி 305 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனை வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இதனால் தொடர் 1:1 என சமநிலை பெற்றது.

அந்தவகையில் சமரி அத்தபத்து பெற்றுக் கொண்ட புதிய துடுப்பாட்ட தரப்படுத்தலில் 773 புள்ளிகளைப் பெற்று முதல் நிலையை மீண்டும் எட்டிப் பிடித்துள்ளார். இதுவரையில் 101 ஒருநாள் போட்டிகளில் 9 சதங்கள் மற்றும் 16 அரைசதங்களுடன் 3513 ஓட்டங்களை குவித்துள்ளார்.

அத்துடன் புதிய தரவரிசையில் இங்கிலாந்து வீராங்கனையான நடாலி சீவர் 764 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீராங்கனையான லாரா வால்வார்ட் 718 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மேலும் புதிய தரப்படுத்தலில் சகலதுறை வீராங்கனைகளுக்கான தரநிலையில் சமரி அத்தபத்து 221 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *