பரீட்சை ஆணையாளருக்கு இம்ரான் எம். பி நன்றி தெரிவிப்பு..!
திருகோணமலை மாவட்ட மாணவர்களின் பரீட்சை தொடர்பான விசாரணையை திருகோணமலையில் நடத்த ஏற்பாடு செய்தமைக்காக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பரீட்சை ஆணையாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரை பரீட்சை தொடர்பான விசாரணைக்கு கொழும்புக்கு வருமாறு பரீட்சை ஆணையாளரினால் அறிவிக்கப் பட்டிருந்தது.
பொருளாதார நெருக்கடி மிக்க இக்காலத்தில் பெற்றோர் தமது பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்துச் செல்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்தனர்.
இம்ரான் எம் பி இது விடயத்தை பரீட்சை ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனை செவி மடுத்த ஆணையாளர் குறித்த மாணவிகளின் கொழும்பு விசாரணையை இரத்து செய்து அதனை திருகோணமலையில் நடத்த ஒழுங்கு செய்துள்ளார். இது குறித்தே இம்ரான் எம் பி பரீட்சை ஆணையாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 71 பேர் இம்முறை சென் ஜோசப் கல்லூரி பரீட்சை நிலையத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தொற்றினர்.
இவர்களில் 70 பேருக்கு விசாரணை அழைப்பு கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனினும் காரணம் எதுவும் யாருக்கும் புரியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.